மத்திய பாஜக அரசு ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு அநீதி இழைப்பதாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். புதிய ரயில் பாதைகளுக்கு வெறும் 1% நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு, ரயில்வே துறையில் தமிழ்நாட்டிற்கும், கேரளாவுக்கும் அநீதி இழைப்பதாகவும், நிதி ஒதுக்கீட்டில் வஞ்சகம் செய்வதாகவும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் (சிபிஎம்) கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். புதிய ரயில் பாதைகளுக்கான மொத்த நிதி ஒதுக்கீட்டில் தெற்கு ரயில்வேக்கு வெறும் ஒரு சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்

சு. வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "2024-25ஆம் ஆண்டுக்கான புதிய ரயில் வழித்தடங்களுக்காக (New Rail Lines) மத்திய பட்ஜெட்டில் ரூ. 31,458 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தெற்கு இரயில்வேக்கு ஒதுக்கப்பட்டதோ வெறும் ரூ. 301 கோடி மட்டுமே. இது மொத்த ஒதுக்கீட்டில் ஒரு சதவிகிதம் தான். பாஜக ஆளும் மாநிலங்களுக்குப் பல்லாயிரம் கோடிகள் ஒதுக்கப்படும் நிலையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு 'பட்டை நாமம்' போடப்பட்டுள்ளது." என்று விமர்சித்துள்ளார்.

தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் புதிய ரயில் பாதைகளுக்கான ஒதுக்கீட்டில் கடுமையான புறக்கணிப்பு நடைபெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூத்த குடிமக்கள் சலுகை மீண்டும் தேவை!

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு சில முக்கிய கோரிக்கைகளையும் சு. வெங்கடேசன் எம்.பி. முன்வைத்துள்ளார்.

“2020ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணச்சலுகையை (Senior Citizen Rail Concession) உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும். இந்தச் சலுகை இல்லாததால், மூத்தோர் தங்கள் மருத்துவம் மற்றும் திருத்தலப் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் திணறுகின்றனர்.

அதே நேரத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பயணக்கட்டண சலுகைகள் மற்றும் அபராத ரத்து செய்யும் முடிவுகள் கேள்விக்குறியாக உள்ளன என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

ரயில்வே திட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்த வெளிப்படையான தகவல்கள் பொதுமக்களுக்குக் கிடைக்க, 'பிங்க் புத்தகம்' (Pink Book) எனப்படும் திட்டப் பட்டியலை நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவதற்குள் வெளியிட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தாமதமாகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பாதுகாப்பு

மேலும், கோவை ரயில் நிலையத்தின் நெரிசலைக் கருத்தில் கொண்டு, போத்தனூரை இரண்டாவது முனையமாக (Second Terminal) மாற்ற வேண்டும். அதேபோன்று, மதுரை ரயில் நிலைய நெரிசலைக் குறைக்கவும் கூடல் நகரில் இரண்டாவது ரயில் முனையத்தை உருவாக்க வேண்டும்.

ரயில்வே பாதுகாப்பை உறுதி செய்ய, இன்டர்லாக் செய்யாத கேட்டுகளை (Uninterlocked Gates) உடனடியாக இன்டர்லாக் கேட்டுகளாக மாற்றுவதற்குப் போதிய நிதி ஒதுக்க வேண்டும். சமீபத்தில் செம்மங்குப்பத்தில் இன்டர்லாக் கேட் இல்லாததால் ஏற்பட்ட பள்ளிக் குழந்தைகளின் உயிரிழப்பு போன்ற விபத்துகளைத் தடுக்க இது மிகவும் அவசியம்.

தெற்கு ரயில்வேயில் உள்ள ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்ப உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.

கொல்லம்–நாகூர் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்றும், மதுரையிலிருந்து மேலும் பல பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.