சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக புதிய உறுப்பினர்களைச் சேர்த்து பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி வருகிறது. ஆர்.பி. உதயகுமார் திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து, எடப்பாடியாரின் மக்கள் நலப் பணிகளைப் பாராட்டினார்.

தேர்தலுக்கு தயாராகும் அதிமுக : சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கட்சி பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட பொறுப்பாளர் தண்டனை மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு புதிய ரத்தம்,பாய்சும் வகையில், இன்றைக்கு பூத் கமிட்டி கிளை பொறுப்பாளர்களை எடப்பாடியார் நியமித்து வருகிறார்.

ரூ.2999 கோடியை தமிழகத்திற்கு வாங்கி தந்த எடப்பாடி

இன்றைக்கு முதலமைச்சர் அதிகாரத்தையும் வைத்துக்கொண்டும், 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை வைத்துக்கொண்டு 100 நாள் சம்பளத்தை கூட மத்திய அரசிடம் கேட்டு பெற முடியாத அரசாக திமுக அரசு உள்ளது. ஆனால் இன்றைக்கு எடப்பாடியாருக்கு முதலமைச்சர் பதவி இல்லை ஆனாலும் மக்கள் மீது அக்கறை கொண்டு மத்திய அரசை வலியுறுத்தி இன்றைக்கு நிலுவையில் உள்ள 100 நாள் வேலை வாய்ப்பு சம்பளம் 2,999கோடியை பெற்றுத் தந்துள்ளார். அது மட்டுமல்லாது மெட்ரோ ரயில் திட்டம், வளர்ச்சி நிவாரண நிதி உள்ளிட்ட நிதிகளை மத்திய அரசிடம் பெற்றுத் தந்து, ஜாதி வாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை இன்றைக்கு நிறைவேற்றி தந்துள்ளார்.

பருவமழையில் தொடரும் உயிரிழப்பு

இன்றைக்கு தென்மேற்கு பருவமழை ஆயத்தமாகவும் வேளையில் உயிர்சேதம், பொருள்சேதம் ஏற்படாத வகையில் எதிர்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் அறிவிக்கிறார், ஆனால் அறிவிக்கும் போதே மதுரையில் மழையால் வீடு இடிந்து மூன்று பேர் பலியாகி உள்ளனர், இன்றைக்கு முதலமைச்சர் அறிக்கையை செயல்படுத்த கூட நாதி இல்லாமல் உள்ளது. உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கும் முதலமைச்சர் நிவாரணம் உதவி அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சிறைகளில் திமுகவினர் அடைக்கப்படுவார்கள்

இன்றைக்கு டாஸ்மாக்கில் 1000 கோடி அளவில் ஊழல் நடைபெற்று ஏற்பட்டுள்ளது .முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நெருக்கமான இரண்டு பேரை இன்றைக்கு அமலாக்கத் துறை தேடி வருகிறது. முதலமைச்சர் ஊட்டியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போது 2026,2031, 2036 ஆகிய 15 ஆண்டுகளில் திமுக தான் ஆட்சியில் தொடரும் என்று கூறுகிறார். ஆனால் இந்த நான்காண்டுகளில் திமுக ஆட்சியில் மக்கள் நடுத்தெருவிற்கு வந்துள்ளார்கள். எனவே அடுத்த 15 ஆண்டுகள் தொடர்ச்சியாக திமுக ஆட்சியில் தொடர முடியாது. நீங்கள் எல்லாம் புழல் மற்றும் திகார் ஜெயிலில் தான் தொடருவீர்கள், அந்த அளவில் உங்கள் ஆட்சி லட்சணம் உள்ளது என ஆர்.பி.உதயகுமார் விமர்சித்தார்.