லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

மின்வாரியத்தில் உதவி பொறியாளர் நியமனத்திற்கான எழுத்து தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியானது. இது தொடர்பாக பழனிபாராதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கடும் கோபமடைந்த நீதிபதிகள் காட்டமான கருத்துகளை தெரிவித்தனர். 
 
அதில் லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும். அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். கடுமையான தண்டணை வழங்கினால் தான் லஞ்சம் வாங்குவது குறையும். அப்போது தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும் என்றனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மார்ச் 1-ம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.