சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிரம்பிய செம்பரம்பாக்கம் ஏரி
சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். இன்று (21.06.2022) காலை 8.00 மணி நிலவரப்படி நீர் இருப்பு 23.48 அடியாகவும் கொள்ளளவு 3500 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து காலை 6.00 மணி நிலவரப்படி 550 கன அடியாக உள்ளது. தற்போது தென்மேற்கு பருவ மழை காலத்தில் கடந்த சில நாட்காளாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவதாலும் வெள்ளநீர் வரத்து காரணமாகவும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று பிற்பகல் (21.06.2022) 12.00 மணி அளவில் விநாடிக்கு வெள்ளநீர் போக்கி வழியாக 250 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நீரின் வரத்தை கண்காணித்து நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது.

சென்னைக்கு ஆபத்தா ?
எனவே ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர் காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் அதிகமான அளவு மழை பெய்ததன் செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்தது. இதன் காரணமாக சென்னை நகரமே மூழ்கும் சூழல் ஏற்பட்டது. அப்போது ஒரே நேர்த்தில் 20 ஆயிரம் கன அடி அளவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதே சென்னை நகரத்தில் வெள்ளம் ஏற்பட காரணமாக அமைந்ததாக கூறப்பட்டது. இரண்டு மூன்று தினங்களுக்கு பிறகு தான் வெள்ள நீர் சென்னையில் நகரப்பகுதியில் இருந்து வெளியேறியது. இதன் காரணமாக மக்கள் தங்களது வீடுகளையும், உடமைகளையும் இழந்து நடு ரோட்டில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது அதற்கான சூழல் இல்லையென்றும் செம்பரம்பாக்கத்தில் இருந்து கடற்கரை வரை செல்லும் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் 250 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுவதால் சென்னை நகரம் வெள்ளத்தால் பாதிக்க கூடிய வாய்ப்பு இருக்காது என பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்,
இதையும் படியுங்கள்
அடி தூள்.. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை... மக்கள் மகிழ்ச்சி.
