தமிழக ஆளுநர் மாளிகையை சுற்றிபார்க்க வாய்ப்பு! எத்தனை நாட்கள்.? என்ன செய்ய வேண்டும் தெரியுமா.?வெளியான அறிவிப்பு
நவராத்திரி கொலுவையொட்டி தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி 10 நாட்கள் நடைபெறும் நிகழ்வில் தினந்தோறும் 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இந்தநிலையில் தமிழக ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஆளுநர் மாளிகையில், 'நவராத்திரி கொலு - 2023' அக்டோபர் 15 முதல் அக்டோபர் 24. 2023 வரை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு ஆளுநர்ஆர்.என். ரவி அவர்கள் சென்னை ஆளுநர் மாளிகையில் அக்டோபர் 15, 2023 (ஞாயிறு) அன்று நடைபெறும் நவராத்திரி கொலு விழாவை தொடங்கி வைக்கிறார்.
ஆளுநர் மாளிகையில் அக்டோபர் 15, 2023 (ஞாயிற்றுக்கிழமை) முதல் அக்டோபர் 24, 2023 (செவ்வாய்க்கிழமை வரை) தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் 'நவராத்திரி கொலு' கொண்டாட்டங்களில் பங்கேற்க (பள்ளி மாணவர்கள்/ பொதுமக்கள் உட்பட) அனைவரும் மனதார வரவேற்கப்படுகிறார்கள்.நவராத்திரி விழா நடைபெறும் நாட்களில் தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள நபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் பெயர், வயது, பாலினம், முகவரி, தொடர்பு எண், புகைப்பட அடையாள சான்று மற்றும் வருகைக்கான தேதி உள்ளிட்ட விவரங்களை rbnavaratrifest@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு ("முதலில் வருவோருக்கு முன்னுரிமை' அடிப்படையில்) அனுமதி அளிக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மற்றும் பிற விவரங்களுடன் அனுப்பப்படும் உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டதற்கான சான்றாக அமையும். பார்வையாளர்கள், சென்னை ஆளுநர் மாளிகையின் வாயில் எண். 2 இல் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் மற்றும் அசல் புகைப்பட அடையாள சான்று (விண்ணப்பிக்கும் போது மின்னஞ்சலில் பதிவேற்றம் செய்யப்பட்ட) ஆணவத்துடன் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் வர வேண்டும்.
வெளிநாட்டு பிரஜைகளும் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம். அவர்களின் அசல் கடவுச்சீட்டு மட்டுமே அடையாள சான்றாக கருதப்படும். சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்திற்குள் செல்பேசி மற்றும் புகைப்பட கருவிகள் அனுமதிக்கப்படாது, நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக விண்ணப்பங்களை நிராகரிக்கும் உரிமை சென்னை ஆளுநர் மாளிகைக்கு உண்டு என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.