Asianet News TamilAsianet News Tamil

காவலாளர்களின் மனநிலையை மேம்படுத்த உளவியல் ஆலோசனை; விரைவில் தொடங்கும் என்றார் தருமபுரி கண்காணிப்பாளர்...

Psychological advice to improve the mind of the police Dharmapuri Superintendent ...
Psychological advice to improve the mind of the police Dharmapuri Superintendent ...
Author
First Published Mar 19, 2018, 8:05 AM IST


தருமபுரி

தர்மபுரியில் பணிபுரியும் காவலாளர்களின் மனநிலையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள மருத்துவர்கள், உளவியல் பயிற்சியாளர்கள் மூலம் விரைவில் காவலாளர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் என்று தருமபுரி காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் 

தருமபுரி காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "முதலமைச்சர் தலைமையில் நடந்த மாநாட்டில் தருமபுரி மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, போக்குவரத்து மேம்பாடு ஆகியவை குறித்து பேசினேன். 

தருமபுரி மாவட்டத்தில் பல வருடங்களுக்கு முன்பு நக்சல் இயக்கங்களின் செயல்பாடு அதிகமாக இருந்தது. அரசும், காவல்துறையும் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் தற்போது நமது மாவட்டத்தில் நக்சல் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. 

நக்சல்களின் செயல்பாடு நமது மாவட்டத்தில் மீண்டும் தலை தூக்காமல் இருப்பதற்காக நக்சல் பிரிவு காவலாளர்கள் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். நக்சல் செயல்பாட்டை முழுமையாக தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மாநாட்டில் பேசினேன்.

தருமபுரி மாவட்டத்தில் இளம் வயது திருமணங்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முழுமையாக தடுப்பதற்காக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து மாநாட்டில் விளக்கினேன். 

மேற்கண்ட வகைகளை சேர்ந்த குற்றங்கள் நடப்பதற்கு வேலை தேடி குடும்ப தலைவர்கள் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு இடம் பெயர்தல் முக்கிய காரணமாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வுகளை உருவாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் 36 கிராமங்கள் நக்சல் பாதிப்பு கொண்டவை. இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக காவல்துறைமூலம் வேளாண் உதவி கருவிகள் வழங்குதல், விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுவழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் நக்சல் பாதிப்பு பகுதிகளில் வளர்ச்சியை அதிகரிக்க மாநாட்டில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி நக்சல் பாதிப்பு கிராமங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவதற்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த உள்ளோம். தொழில்பயிற்சிகளை அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

பாலக்கோட்டை தலைமையிடமாக கொண்டு புதிய காவல்துறை உட்கோட்டம் அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை விரிவுபடுத்தி செயல் படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். 

குற்றச் செயல்கள் தொடர்பான தடயவியல் பரிசோதனைகளை செய்ய தர்மபுரி மாவட்டத்தில் தடயவியல் ஆய்வகம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. தற்போது தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் தர்மபுரியில் காவல்துறையின் தடயவியல் ஆய்வகம் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இதன்மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் தொடர்பான தடயவியல் பரிசோதனைகளின் முடிவுகளை இங்கேயே விரைவாக பெறமுடியும். இதனால் வழக்குகளின் விசாரணைகளை விரைவுபடுத்தி முடிக்க வாய்ப்பு உருவாகும். 

இந்த தடயவியல் ஆய்வகம் தற்காலிகமாக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்படும். தடயவியல் ஆய்வகத்திற்கு கட்டிடங்கள் கட்டபட்ட பின்னர் நிரந்தர இடத்தில் செயல்படும்.

தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி கூட்டுரோடு பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. விரைவில் அங்கு காவல் நிலையம் அமைக்கப்படும்.

தொடர்ச்சியான பணியால் காவலாளர்களுக்கு போதிய அளவு தூக்கமின்மை, குடும்ப பொறுப்புகளில் முழுகவனம் செலுத்தமுடியாத நிலை, உடல்நல பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  இத்தகைய பிரச்சனைகள் மனநிலை தொடர்பான பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. 

இதைத் தடுக்க தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரியும் காவலாளர்களின் மனநிலையை மேம்படுத்த உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவர்கள், உளவியல் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காவலாளர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கும் பணி விரைவில் தொடங்கும்" என்று அவர் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios