நீலகிரி

பிரிவு – 17 நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு ஆதார் அட்டை தருகிறீர்கள். ஆனால், மின் இணைப்பு., அடிப்படை வசதிகள் மட்டும் தரமாட்டீங்களா? என்று மக்கள் அரசிற்கு சவுக்கடி கேள்வி எழுப்பினர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர் தாலுகாவில் 80 ஆயிரத்து 88 ஏக்கர் வகைப்படுத்தப்படாத பிரிவு – 17 வகை நிலம் இருக்கிறது.

இவ்வகை நிலத்தில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் மேற்கொள்ள கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது. இதனால், பிரிவு – 17 நிலத்தில் குடியிருக்கும் மக்கள் மின்சார வசதியின்றியும், அடிப்படைத் தேவைகள் இன்றியும் அவதிப்படுகின்றனர்.

இதனால், தங்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக இம்மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரிவு – 17 நிலத்தில் குடியிருக்கும் மக்களுக்கு மின்சார இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கூடலூர், பந்தலூர், தேவர்சோலை, ஐயங்கொல்லி, சேரம்பாடி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கடந்த மாதம் 24–ஆம் தேதி மின்சார இணைப்பு கேட்டு மனு அளிக்கும் போராட்டத்தை நடத்தினர்.

இதில், எண்ணற்றோர் கலந்துகொண்டு மின் இணைப்பு கேட்டு மனுக்களை கொடுத்தனர். பிறகு, மே மாதம் 3–ஆம் தேதி அதாவாது நேற்று மின் இணைப்பு கேட்டு இரண்டாவது கட்டமாக மின்வாரிய அலுவலகங்களில் மனுக்கள் அளிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனையொட்டி நேற்று காலை 10 மணி முதல் கூடலூர், பந்தலூர், ஐயங்கொல்லி, சேரம்பாடி மின்வாரிய அலுவலகங்களில் பிரிவு – 17 நிலத்தில் குடியிருக்கும் மக்கள் மின்சார வசதி கேட்டு மனுக்கள் அளித்தனர். இதனால், மின்வாரிய அலுவலகங்கள் முன்பு மக்கள் கூட்டம் அள்ளியது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வாசு தெரிவித்தது:

“ஆதார் மற்றும் குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், பிரிவு – 17 நிலத்தில் குடியிருக்கும் மக்களுக்கு மின்சாரம் மட்டும் வழங்கப்படுவதில்லை.

இதனால், அரசின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும் வகையில் அந்தந்த மின்வாரிய அலுவலகங்களில் மக்களை திரட்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடந்த மாதம் மனுக்கள் அளிக்கப்பட்டது. தற்போது 2–வது கட்டமாக மனு அளிக்கும் போராட்டம் நடத்தினோம். இதில் சுமார் 2 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டு மனுக்கள் அளித்துள்ளனர்.

இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் வருகிற 15–ஆம் தேதி மக்களைத் திரட்டி கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்துவோம்” என்று அவர் எச்சரித்தார்.