பொறையாறு,

நாகையில், தீப்பிடித்து எரிந்து சேதமான குடிசை வீட்டின் உரிமையாளருக்கு எம்.எல்.ஏ பூம்புகார் பவுன்ராஜ் நிவாரணப் பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.

நாகை மாவட்டம், பொறையாறு ராஜீவ்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்கதுரை 45). இவரது குடிசை வீடு திங்கள்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு தீயணைப்பு நிலைய அலுவலர் கோபி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பாத்திரங்கள், மின்விசிறி, பீரோ உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகின.

தகவல் அறிந்த பூம்புகார் பவுன்ராஜ் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் தமிழக அரசு சார்பில் ரூ.5 ஆயிரம் மற்றும் அரிசி, மண்எண்ணெய், வேட்டி–சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

அப்போது தரங்கம்பாடி தாசில்தார் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் சத்தியபாமா, கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணசாமி, முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வீரசேகர், பார்த்திபன், ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளிதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.