ஆளுநருக்கு எதிராக களம் இறங்கிய திமுக.! உருவபொம்மை எரிப்பு- தமிழகம் முழுவதும் போராட்டம்
தமிழக சட்டப்பேரவையை அவமதித்தாக கூறி ஆளுநருக்கு எதிராக மாநிலம் முழுவதும் திமுக போராட்டம் நடத்தியது. ஆளுநரின் செயல் தமிழக மக்களையும், அரசையும் அவமதிப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
ஆளுநரும் சட்டசபையும்
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாகும். அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த உரையை ஆளுநர் ரவி தமிழக சட்டப்பேரவையில் வாசிக்காமல், கூடுதல் வரிகளை சேர்த்தும், வார்த்தைகளை நீக்கியும் படித்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நேற்று தமிழக சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநருக்கு தமிழக அரசு சார்பாக பேண்டு வாத்தியம் முழங்க மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டசபைக்குள் ஆளுநர் ரவி வந்த நிலையில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால் தேசிய கீதம் பாடப்படவில்லையெனக்கூறி சட்டசபையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறினார்.
திமுக போராட்டம்
இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகையில், தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என கூறியிருந்தார். இதனையடுத்து ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து திமுக சார்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் படி மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட செயலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எரிக்கப்பட்ட ஆளுநரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.இதே போல திருச்சி, கோவை, நெல்லை, சென்னை என பல இடங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டது.
உருவபொம்மை எரிப்பு
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் மற்றும் திமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் உட்பட திமுகவின் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது அதிமுக பாஜக இடையே மறைமுகமாக இருக்கக்கூடிய கூட்டணி குறித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் ஆளுநருக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினர்.