கடலூர் 

மக்களுகு தரவேண்டிய இழப்பீட்டு பிரச்சனை முடிவுக்கு வந்ததையடுத்து விரைவில் சர்வீஸ் சாலை அமைத்து பண்ருட்டி இரயில்வே மேம்பாலம் திறக்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் தண்டபாணி உறுதியளித்தார். 

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள சென்னை சாலையில் இரயில்வே கேட் உள்ளது. இரயில்கள் அந்த வழியாக செல்லும்போதெல்லாம் இரயில்வே கேட் மூடப்படுவதால் பண்ருட்டி - சென்னை சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 

எனவே, தண்டவாளத்தின் குறுக்கே இரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பண்ருட்டி நகர மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பண்ருட்டியில் இரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். 

இதனையடுத்து 2014-ஆம் ஆண்டு மேம்பாலம் கட்டுமானப்பணி தொடங்கியது. ஒப்பந்தப்படி மேம்பாலம் 2016-ம் ஆண்டுக்குள் கட்டி முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை.

மேலும், மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்படவில்லை. நிலம் கையகப்படுத்தப்படும் அளவை வருவாய்த்துறையினர் குறியிட்டுள்ளனர். 

அந்த நிலத்துக்கு சொந்தமானவர்கள், அதில் கடை வைத்திருப்பவர்கள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்கள் கேட்கிற இழப்பீடு தொகை வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையால், நிலம் கையகப்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.

இரயில்வே மேம்பால பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விடக்கோரி அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சேர்ந்த வியாபாரிகள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் கடந்த வாரம் கடலூர் மாவட்ட ஆட்சியர் தண்டபாணியை சந்தித்து, மேம்பால பணியை விரைந்து முடித்து திறக்க வேண்டும் என்று மனு கொடுத்தார்.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் தண்டபாணி நேற்று பண்ருட்டிக்கு வந்தார். அங்கு இரயில்வே மேம்பால பணியையும், சர்வீஸ் சாலை அமைப்பதற்காக நிலம் ஆர்ஜிதம் செய்யக்கூடிய இடத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது தாசில்தார் ஜெயக்குமார், நகராட்சி ஆணையாளர் வெங்கடாசலம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் வீரப்பன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் ஆட்சியர் தண்டபாணி செய்தியாளர்களிடம், "மேம்பால பணி முடிந்து விட்டது. பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியதுள்ளது. 

நிலம் உரிமையாளர்கள் மற்றும் கடை வியாபாரிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் இழுபறி ஏற்பட்டு வந்தது. அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் நிலத்தை கையகப்படுத்தி, சர்வீஸ் சாலை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு இரயில்வே மேம்பாலம் திறக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.