Private school and petrol station sealed by municipal management
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் பள்ளிக்கூடம், பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்ட ஏழு வணிக வளாகங்களுக்கு பூட்டு போட்டு ‘சீல்’ வைத்தது நகராட்சி நிர்வாகம்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகர் பகுதியில் நாளுக்கு நாள் குடியிருப்புகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இதில் முறையாக அனுமதி பெற்று வீடுகள், வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகளை கட்டியுள்ளனர்.
ஆனாலும், பலர் உரிய அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியிருப்பதாக அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால் நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக நகரமைப்பு அலுவலர்கள், ஆய்வாளர்கள் நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து அளவீடு செய்தனர்.
அப்போது உரிய அனுமதியின்றி பல கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன.
இதனை எதிர்த்து பலர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். இதில் பல வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு உரிய முறையில் அரசினை அணுகி நிவாரணம் தேடிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பலர் நகராட்சி நிர்வாக ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த நிலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட 47 கட்டிட உரிமையாளர்களுக்கு கடந்த மாதம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று அந்த கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்கும் பணிகள் தொடங்கின.
நகராட்சி ஆணையாளர் சரவணன் தலைமையில் நகரமைப்பு அலுவலர் முருகானந்தம், இளநிலை பொறியாளர் சேகர் ஆகியோர் நகராட்சி ஊழியர்களுடன் ஏரிச்சாலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் பள்ளி மற்றும் வத்தலக்குண்டு பிரதான சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் உள்பட 7 வணிக வளாகங்களுக்கு பூட்டு போட்டு ‘சீல்’ வைத்தனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சரவணன் கூறியது: "கொடைக்கானல் நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட 47 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக 7 கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும்" என்று அவர் கூறினார்.
