புதுக்கோட்டை
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவ - மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் மறியல், கடை அடைப்பு போராட்டங்கள் நடந்தன. 

அதேபோன்று நேற்று கந்தர்வகோட்டை அருகே புனல் குளத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த கந்தர்வகோட்டை தாசில்தார் பொன்மலர், காவல் ஆய்வாளர் மன்னர்மன்னர் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட மாணவ - மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இந்த மறியலால் அந்தப் பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவ - மாணவிகள் கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.