திருச்செங்கோடு அருகே நள்ளிரவு தனியார் வங்கியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வையப்பமலையில் தனியார் வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் வங்கியில் திடீரென தீப்பிடித்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

 

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் தீ அனைத்து இடங்களிலும் பரவி கணினி, ஏ.சி., முக்கிய ஆவணங்கள் முற்றிலுமாக எரிந்தன. இப்பொருட்களின் சேதமதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடமானத்திற்கு வாங்கி வைத்திருந்த நகைகள், தனி லாக்கரில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த பொருட்கள் ஆகியவை பத்திரமாக இருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்டபட்டதா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.