தமிழகத்தில் மழை பொய்த்து போய்விட்டது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். பலர், அதிர்ச்சியில் இறந்தனர்.

மேலும், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும், சினிமா நட்சத்திரங்களும் மத்திய அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இன்று டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சந்தித்து பேசினார். அப்போது, அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றவதற்கு மத்திய அரசிடமும், குடியரசு தலைவரிடமும் பேசுவதாக உறுதியளித்தார்.

இதைதொடர்ந்து இன்று மாலை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க அனுமதி கிடைத்துள்ளது.  இதையொட்டி, இன்று இரவு 7.30 மணிக்கு ஜி.கே.வாசன், குடியரசு தலைவரை சந்திக்கிறார்.

அப்போது, டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சார்பாக, விவசாயி அய்யாகண்ணு உடன் செல்ல இருக்கிறார். அப்போது, விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுக்க உள்ளனர்.