சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை தயார் செய்து அவர்கள் ஓரிரு நாட்களில் இடமாற்றம் செய்து தூக்கி அடிக்க தயாராக உள்ளார் பாட்ஷா ஒபிஎஸ்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகளால் தமிழகம் எப்போதும் பரபரப்பாக இருக்கிறது. அடுத்து என்ன நடக்குமோ என்ற பதட்ட நிலையிலேயே மக்கள் இருக்கின்றனர்.
ஒருபக்கம் சசிகலாவை எதிர்த்துக் கொண்டே மறுபக்கம் ஓபிஎஸ் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து திறமையாக காய் நகர்த்தி வருகிறார். அவரது நடவடிக்கைகளுக்கு காவல் துறையின் ஆதரவு மிக முக்கியம்.
ஆனால், தமிழக காவல் துறையில் பல அதிகாரிகள் சசிகலா மற்றும் நடராஜனின் கட்டுப்பாட்டில் அவர்களது ஆதரவாளர்களாக உள்ளனர். அவர்கள் மூலம் அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் முன்கூட்டியே சசிகலா தரப்புக்கு தெரிந்து விடுவகிறது.
இதனால் காவல் துறையை முதலில் தனது கையில் எடுக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக, காவல் ஆணையர் மாற்றம் போன்ற நடவடிக்கைகளை மௌனமாக சாதித்து வருகிறார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீடு, நினைவு இல்லமாக மாற்றப்படும் என்றும் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
போயஸ் கார்டன் வீட்டில் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வசித்து வருகிறார். அந்த வீட்டை அரசு கைப்பற்றுவதற்கும், விசாரணையை முறையாக நடப்பதற்கும் காவல் துறையின் உதவி தேவை.
தற்போது சசிகலா தரப்பினர் சுமார் 80 எம்.எல்.ஏக்களை ஹோட்டல்களில் அடைத்து வைத்துவிட்டு அவர்களை யாரும் தொடர்புகொள்ள முடியாதபடி செய்துள்ளனர். இந்த எம்.எல்.ஏக்களை வெளியே கொண்டுவருவதற்கும் காவல் துறையின் உதவி தேவை.
அரசின் நடவடிக்கைகள் அனைத்தையும் செயல்படுத்த காவல் துறையின் உதவி மிகவும் முக்கியம். தங்களது சொல்படி நடக்கும் அதிகாரிகளை முக்கிய பொறுப்புகளில் அமர்த்த ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார்.
இதற்காக முக்கிய பொறுப்புகளில் இருக்கும் சசிகலா ஆதரவு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடிவு செய்து, அவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த இடங்களில் அரசு ஆதரவு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர் என்ற தகவல் காவல்துறை மற்றும் அரசியில் வட்டாரங்களில் இருந்து கசிகிறது.
காவல் துறையை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் ஓரிரு நாட்களில் மாற்றப்பட இருப்பதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் நேற்று காலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது இந்த தகவலை உறுதி செய்கிறது.
