சாத்தூரில் எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அதில் சிறுவயதில் இருந்தே நான் ஊசி கூட போட்டது கிடையாது. மற்றவர்கள் என்னை ஒதுக்கிவைப்பது போல் எனக்கு தோன்றுகிறது. மற்றவர் ரத்தம் ஏற்றப்பட்டதன் மூலம் இந்த நோய் எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புக்கு உள்ளாக்கியதற்கு பதில், என்னை கொலை செய்து இருக்கலாம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சேர்ந்த கூலி தொழிலாளியின் 24 வயதுடைய மனைவி 2-வது முறையாக கர்ப்பமானார். அதே பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வழக்கமான சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் உடலில் ரத்தம் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் ரத்த ஏற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து, ரத்த வங்கியில் வாங்கி ஏற்றப்பட்ட ரத்தத்தில் எச்ஐவி வைரஸ் தொற்று இருந்ததும், அது கர்ப்பிணி உடலில் பரவியதும் தெரியவந்தது. 

இந்த விவகாரத்தில் ஏற்கனவே ரத்த வங்கி ஊழியர்கள் உட்பட 3  பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் சாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

புகார் அளித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அந்த கர்ப்பிணி பெண் சிறுவயதில் இருந்தே நான் ஊசி கூட போட்டது கிடையாது. மற்றவர்கள் என்னை ஒதுக்கிவைப்பது போல் எனக்கு தோன்றுகிறது. மற்றவர் ரத்தம் ஏற்றப்பட்டதன் மூலம் இந்த நோய் எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புக்கு உள்ளாக்கியதற்கு பதில், என்னை கொலை செய்து இருக்கலாம் என கண்ணீர் மல்க தெரிவித்தார். இதன் பின் என்னை யாரும் ஒதுக்க வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.