pranab mukharjee visit to kanchipuram

தேர்தல் ஆணையம், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கை வெளியிடும்(14ந்தேதி) ஒருநாள் முன்பாக, அதாவது, (நாளை)செவ்வாய்கிழமை காஞ்சிபுரத்துக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒருநாள் பயணமாக வருகை தருகிறார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்த முறைப்படியான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் 14-ந்தேதி வெளியிடுகிறது, 13-ந்தேதி பிரணாப் முகர்ஜி காஞ்சிபுரம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து குடியரசு தலைவர் மாளிகை வட்டாரங்கள் கூறியதாவது-

காஞ்சிபுரத்துக்கு ஒரு நாள் பயணமாக குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி 13-ந்தேதி செல்கிறார். செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்படும் பிரணாப் முகர்ஜி மதியம் 1.45 மணிக்கு அரக்கோணம் கடற்படை விமானத் தளத்தை சென்று அடைவார். அங்கிருந்து சாலை மார்க்கமாக 30 கி.மீ. தொலைவில் உள்ள காஞ்சிரபுரத்துக்கு செல்ல உள்ளார்.

அங்கு காஞ்சி காமாட்சி கோயிலில் வழிபாடு செய்யும் பிரணாப் முகர்ஜி நண்பகல் 3 மணிக்கு காஞ்சி மடத்துக்கு செல்கிறார். அங்கு மடாபதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு பாத பூஜையை பிரணாப் செய்கிறார். சங்கர மடத்தில் உள்ள சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பிருந்தாவனத்திலும் பிரணாப் வழிபாடு செய்ய உள்ளார். மேலும், காஞ்சிபுரத்தில் உள்ள துர்கை அம்மன் கோயிலுக்கும் பிரணாப் முகர்ஜி செல்கிறார். இங்கு வழிபாடுகளை முடித்துக்கொண்டு மீண்டும் சாலைமார்க்கமாக அரக்கோணம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்படுகிறார்.

குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு காஞ்சிபுரம், அரக்கோணம் சாலைகளில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜி வருகை தரும் காஞ்சிமடம், கோயில்களில் குடியரசு தலைவரின் தனிப்படை பாதுகாப்பு பிரிவினர் ஆய்வு செய்ய உள்ளனர். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் தமிழக போலீசாரை குடியரசு தலைவர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கு கடந்த மாதம் 24-ந்தேதி காஞ்சிரபுரத்துக்கு பிரணாப் முகர்ஜி வருகை தருவதாக இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. அந்த பயணத்தில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில், ராமானுஜர் சந்நிதி, ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளிட்டவற்றில் பிரணாப் முகர்ஜி வழிபாடு செய்வதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரணாப் முகர்ஜி வருகை குறித்து தமிழகத்தின் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஒருவரிடத்தில் கேட்டபோது, “ குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கை வெளியிடும் ஒருநாள் முன்பாக காஞ்சிபுரம் வருவதால், தேர்தலில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. இவரின் வருகை பா.ஜனதா முடிவிலும் தாக்கத்தை ஏற்படுத்தாது” என்றார்.

காஞ்சி சங்கர மடம் என்பது, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிசத், பா.ஜனதா தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.