’இன்னும் சில மணி நேரங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படலாம்’ ... அமைச்சர் தங்கமணி
’இன்னும் சில மணி நேரங்களில் கஜா புயல் கரையை கடக்கும்போது சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படும். அதை சமாளிக்க மக்கள் முன்னேற்பாடுகள் செய்துகொள்ளவேண்டும்’ என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
’இன்னும் சில மணி நேரங்களில் கஜா புயல் கரையை கடக்கும்போது சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படும். அதை சமாளிக்க மக்கள் முன்னேற்பாடுகள் செய்துகொள்ளவேண்டும்’ என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகி, தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் கடலூருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை மாலை கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படும். அலைகள் ஒரு மீட்டர் உயரத்துக்கு மேலெழும்பும். கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும். சில இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிகளில் குடிசை, ஓட்டு வீடுகள், மின்கம்பங்கள், சாலைகள் சேதமடைய வாய்ப்புள்ளது. கடலையொட்டிய தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் கடல் நீர் புகவும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து, வெள்ளி, சனிக்கிழமைகளில் (நவ. 16, 17) தமிழகம், புதுச்சேரி, கேரளம், லட்சத்தீவு, தெற்கு கர்நாடகத்தின் ஒருசில பகுதிகளில் பலத்த, மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
தற்போதைய நிலவரப்படி கஜா புயல் இன்று இரவு சுமார் 8 மணியிலிருந்து 11.30 மணியளவில் பாம்பன்- கடலூர் இடையே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும்போது சென்னைக்கு பாதிப்பு இருக்காது. மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ’கஜா புயல் கரையை கடக்கும்போது சம்பந்தப்பட்ட கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு தவிர்க்கமுடியாமல் மின் இணைப்பு துண்டிக்கப்படும்’ என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.