சென்னையில் இன்று தொடங்குகிறது தபால் வாக்குப்பதிவு.. யார்.? யார்.? வாக்குகளை செலுத்தலாம்.? விவரம் இதோ
நாடாளுமன்ற தேர்தலையொட்டி முதியோர், ஊனமுற்றவர்கள் தபால் வாக்குகளை செலுத்தும் பணி மற்ற மாவட்டங்களில் கடந்த வாரம் தொடங்கப்பட்ட நிலையில், இன்று சென்னை,காஞ்சீபுரம் மாவட்டங்களில் தபால் ஓட்டு போடும் பணி தொடங்குகிறது.
நாடாளுமன்ற தேர்தல் பணி தீவிரம்
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்தநிலையில் தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையமும் வாக்குப்பதிவுக்கான பணிகளை தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் கொண்டு செல்ல வேண்டிய இவிஎம் இயந்திரங்களை மாவட்ட தலைநகரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோருக்கு தபால் வழியாக ஓட்டளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தபால் வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.
சென்னையில் இன்று தொடங்கும் தபால் வாக்குப்பதிவு
சென்னையில் இன்று முதல் தொடங்கப்படவுள்ளது. சென்னையில் மொத்தமாக 39,01,167 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 11,369 பேர் மாற்றுத்திறனாளிகள்; 85 வயதுக்கு மேற்பட்டோர் 63,751 பேர். மொத்தம், 75,120 வாக்காளர்கள் தபால் ஓட்டு அளிக்க உள்ளனர். தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விருப்பத்தை பெறுவதற்கு வசதியாக, அவர்களின் வீடுகளுக்கே சென்று, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் படிவம் 12டி வழங்கியுள்ளனர். மேற்படி நபர்களிடம் அவர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகள் பெற ஏதுவாக நடமாடும் குழுக்கள் (Mobile Team) அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நடமாடும் குழுவிலும் ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர். ஒரு உதவி வாக்குச்சாவடி அலுவலர், ஒரு நுண்பார்வையாளர். ஒரு காவலர் மற்றும் ஒரு புகைப்பட கலைஞர் ஆகியோர் இருப்பர்.
வாக்குப்பதிவிற்கான ஏற்பாடு தீவிரம்
இதே போல தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் வாக்களிக்க ஏதுவாக படிவம் 12 மற்றும் படிவம் 12A ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதர மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் பணியாளர்களுக்கு அஞ்சல் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்க வசதி மையம் ஏற்படுத்தப்பட உள்ளன. இதர மாவட்டங்களில் பணிபுரிய உள்ள காவல் துறையைச் சேர்ந்த காவலர்கள் அஞ்சல் வாக்கு செலுத்தும் வகையில் தனியாக தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வசதி மையம் ஏற்படுத்தப்பட உள்ளன.
இதையும் படியுங்கள்
நீட் ரத்து ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் எப்போது சொல்வார்? எடப்பாடி பழனிசாமி கேள்வி