விழுப்புரம்
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி விழுப்புரத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கருப்பு பட்டை அணிந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் அருமுத்துவள்ளியப்பா, தலைமையிட செயலாளர் பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், விழுப்புரம் கல்வி மாவட்ட தலைவர் எழிலன், செயலாளர் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் நாகமுத்து, தனசேகர், சுந்தரமூர்த்தி, தாமோதரன், திலகர், உமாமகேஸ்வரன், ஜான்பிரான்சிஸ் மார்க்ராஜ், முருகதாஸ் உள்பட பலர் பங்கேற்று கருப்பு பட்டை அணிந்தபடி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

அதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு இவர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்தபடியே பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.