அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல்
அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், அமைச்சர் பொன்முடியின் சர்ச்சையான பேச்சை அடுத்து அனைத்து தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தது. அதேபோல் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளாலும் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது.
பொன்முடி, செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி பறிப்பு
அதன்படி பொன்முடி வகித்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், செந்தில் பாலாஜி வகித்த மின்சாரத்துறை, அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மனோ தங்கராஜ் மீண்டும் பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும் வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்
இந்நிலையில் மீண்டும் தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கூடுதலாக சட்டத்துறையும், துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை இலாகா மாற்றம் குறித்து முதலமைச்சர் பரிந்துரைத்ததை ஏற்று ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்துள்ளது.


