தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் இலாகாவாக காதி மற்றும் கிராம தொழில்கள் இலாகா வழங்கப்பட்டுள்ளது. இந்த இலாகா, அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்து மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவையில் திடீரென் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிறிய இலாகா மாற்றத்தில் மூத்த அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் இலாகா கிடைத்துள்ளது.

அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் இலாகா, அமைச்சர் பொன்முடிக்கு மாற்றக் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடி, காதி, கிராம தொழில்கள் வாரியத் துறையையும் சேர்த்து கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பால்வளத்துறையை மட்டும் தொடர்ந்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் பொறுப்பில் இருக்கும்.

இந்த இலாகா மாற்றம் குறித்து ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிடட்டுள்ளது. அதில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில் அமைச்சரவையில் இந்த மாற்றம் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, உயர்கல்வித்துறையை கவனித்து வந்த அமைச்சர் பொன்முடி, ஜெயிலுக்குச் சென்று வந்த பிறகு வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரிடம் இருந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வசம் வழங்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் முதலில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அவர் ஊழியர் ஒருவரை நோக்கித் தரக்குறைவாகப் பேசி சர்ச்சையில் சிக்கியதால், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். அந்தத் துறையைக் கவனித்து வந்த அமைச்சர் சிவசங்கருக்கு போக்குவரத்துத்துறை ஒதுக்கப்பட்டது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டபோது, நடைபெற்ற இலாகா மாற்றத்தில் பால்வளத்துறை இலாகா அமைச்சர் மனோ தங்கராஜிடம் இருந்து ராஜ கண்ணப்பனுக்கு மாற்றித் தரப்பட்டது. அத்துடன் காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத் துறையும் அவருக்கு ஒதுக்கப்பட்டது. இப்போது அந்தத் துறை மட்டும் மூத்த அமைச்சர் பொன்முடி வசம் மாறியுள்ளது.

இந்த இலாகா மாற்றத்துக்கான காரணம் என்ன என்று இதுவரை எந்தத் தகவலும் இல்லை. விரைவில் இந்த மாற்றத்துக்கான காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கலாம்.