பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 28 சிறப்பு முன்பதிவு மையங்கள் இன்று திறக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு, 11ம் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

11ம் தேதி 794 சிறப்பு பஸ்கள், 12ம் தேதி 1,779 பஸ்கள், 13ம் தேதி 1,872 பஸ்கள் என மொத்தம் 4,445 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.  பிற மாவட்டங்களில் இருந்து மொத்தமாக இந்த 3 நாட்களும் 11,270 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த சிறப்பு பஸ்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு மையங்களை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார்.

தீபாவளிப் பண்டிகையை போன்றே, 11, 12, 13ம் தேதிகளில் வெளியூர் செல்லும் நீண்ட தூர பஸ்கள் அண்ணாநகர் (மேற்கு), தாம்பரம் சானிடோரியம், பூவிருந்தவல்லி, அடையாறு பஸ் நிலையம், கோயம்பேடு ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.