Asianet News TamilAsianet News Tamil

சங்கரய்யாவின் தியாகம் என்றென்றும் நிலைத்து நிற்கும்- தலைவர்கள் இரங்கல் அஞ்சலி- இறுதி சடங்கு எப்போது.?

விடுதலை போராட்ட தியாகி சங்கரய்யா உடல்நிலை பாதிப்பு காரணமாக இன்று காலமானார். அவரதுக்கு வயது 102, மருத்துவமனையில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு உடல் எடுத்து செல்லப்பட்ட பிறகு, இன்று பிற்பகல் 3 மணிக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது. இதனையடுத்து நாளை சங்கரய்யா உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Political party leaders condole the demise of sankaraiah KAK
Author
First Published Nov 15, 2023, 12:04 PM IST | Last Updated Nov 15, 2023, 12:04 PM IST

சங்கரய்யா மறைவு- கேஎஸ் அழகிரி இரங்கல்

விடுதலை போராட்ட தியாகியும், கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவருமான சங்கரய்யா உடல்நிலை பாதிப்பு காரணமாக இன்று காலை காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் என். சங்கரய்யா அவர்கள் தனது 102-வது வயதில் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன்.

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் தமது வாழ்நாள் முழுவதும் உரிமைக் குரல் எழுப்பி பல்வேறு போராட்டங்களை நடத்தி பலமுறை சிறை புகுந்தவர். எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு மக்களோடு மக்களாக தொண்டால் பொழுதளந்த தூய்மையான தலைவர். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்வதற்கு தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

Political party leaders condole the demise of sankaraiah KAK

ராமதாஸ் இரங்கல்

தோழர் என். சங்கரய்யா அவர்களது மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் இயக்க தோழர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய விடுதலைப் போராட்டத் தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான தோழர் என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

இடது சாரி இயக்கங்களின் தலைவர்கள் வாழ்க்கை போராட்டங்களால் நிரம்பியிருக்கும். ஆனால், தோழர் சங்கரய்யா அவர்கள் போராட்டத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர். பள்ளிப் பருவத்தில்  தொடங்கி, நூற்றாண்டை கடந்த பிறகும் கூட மக்கள் உரிமைகளுக்காகவும், சமூகக் கேடுகளுக்கு எதிராகவும் போராடி வந்தவர். தமிழ்நாட்டு மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட தலைவர்களில் ஒருவர்.

Political party leaders condole the demise of sankaraiah KAK

ஈடு செய்ய முடியாத இழப்பு

2001 சட்டப்பேரவைத் தேர்தலிலும், அதற்கும் முன்பும், பின்பும் தோழர் சங்கரய்யா அவர்களுடன் நானும் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல அறிமுகமும், ஒருவர் மீது மற்றொருவருக்கு மரியாதையும் உண்டு. தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறும், அரசியலில் அவர் கடைபிடித்த நேர்மையும், ஒழுக்கமும் இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும். அத்தகைய சிறப்பு மிக்க தலைவரின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இடதுசாரி இயக்கங்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். தோழர் சங்கரய்யா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மற்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமாவளவன் இரங்கல்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழகத்தின் மூத்த தலைவரும்  முதுபெரும் தலைவருமான 'தகைசால் தமிழர்' தோழர் சங்கரய்யா(102) அவர்களின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று பல்லாண்டுகள் சிறையில் வாடியவர். தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கம் வளர்வதற்கு பெரிதும் பங்களிப்பு செய்தவர். அவரது மறைவு பொதுவுடைமை இயக்கங்களுக்கும் உழைக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் நேர்ந்த ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

 

டிடிவி தினகரன் இரங்கல்

அம்முக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சுதந்திர போராட்ட வீரரும், இடது சாரி இயக்கத்தின் அடையாளமுமான தோழர் என்.சங்கரய்யா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இடதுசாரி தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் இந்திய சுதந்திர போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், அடித்தட்டு மக்களுக்கான போராட்டம், விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் என தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்த அப்பழுக்கற்ற பொதுவாழ்வின் தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் இழப்பு கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்குமான பேரிழப்பாகும்.

 

அண்ணாமலை இரங்கல்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முதுபெரும் அரசியல் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவருமான திரு. சங்கரய்யா அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். மூத்த தலைவரான திரு. சங்கரய்யா அவர்களது மறைவு, தமிழக அரசியலுக்கு பேரிழப்பு. திரு. சங்கரய்யா அவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழக பாஜக   சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்!!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios