Political parties are trying to misunderstand the central government announcement

திருநெல்வேலி

மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் சில அரசியல் கட்சிகள், மத்திய அரசின் அறிவிப்பை தவறாக புரிந்து கொண்டு ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துகிறார்கள் என்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மக்களும் தான் போராட்டம் நடத்துகிறார்கள் என்பது பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தெரியவில்லை போலும்.

நெல்லையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், “திமுக தலைவர் கருணாநிதியை நாங்கள் மதிக்கிறோம். அவர் மூத்த அரசியல்வாதி என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், சென்னையில் கருணாநிதியின் வைரவிழாவுக்கு வந்தவர்கள் வயதானவர்கள் என்று கூறியிருந்தேன். அதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், என்னை அவர் 16 வயது இளைஞரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். நான் 61 வயது இளைஞர் தான். தனது வயது மறைக்க வேண்டும் என்றால் நான் தலை முடிக்கு சாயம் பூசி இருப்பேன். அதற்கு அவசியம் இல்லை.

பாரதீய ஜனதா கட்சி, தமிழகத்தில் மறைமுகமாக ஆட்சி செய்கிறது என்று சில அரசியல் கட்சிகள் கூறுகின்றன. இந்தக் குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? எந்த விதமான ஆதாரமும் இல்லாமல், குற்றச்சாட்டுகளை கூறுவது சரியில்லை.

மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்களை சாப்பிட வேண்டாம் என்று யாரும் கையை பிடிக்கவில்லை. அவர்களை தடுக்கவும் இல்லை. யார் வேண்டுமானாலும் மாட்டு இறைச்சி சாப்பிடலாம்.

சில அரசியல் கட்சிகள், மத்திய அரசின் அறிவிப்பை தவறாக புரிந்து கொண்டு ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துகிறார்கள். இந்த சட்டம் மாடுகளை ஒழுங்குபடுத்துவதற்காகவும், பசுக்களை பாதுகாக்கவும் கொண்டு வரப்பட்டதாகும்” அவர் கூறினார்.