திருச்சியில் பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் விவேக், பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தார். உத்தமர்கோவில் ரயில்வே மேம்பாலத்தில் நடந்த இந்த துயர சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் சாலை விபத்துகள்
தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தினந்தோறும் சாலை விபத்துகளால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் சாலை விபத்துகளை தவிர்க்க இரு வழிச்சாலை திட்டம், 4 வழிச்சாலை திட்டம் போன்றவை மூலம் விபத்துகள் தவிர்க்கப்படுகிறது. இருந்த போதும் ஒரு சில இடங்களில் தவிர்க்க முடியாத வகையில் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த நிலையில், திருச்சியில் பணி முடிந்து வீடு திருப்பிய காவலர் ஒருவர் மீது பேருந்து மோதியதில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே உள்ள செங்குடி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் விவேக் (32).இவர் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார்.

பைக் மீது மோதிய அரசு பேருந்து
நேற்று இரவு தனது பணியை முடித்த விவேக் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவில் ரயில்வே மேம்பாலத்தில் வளைவில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சேலத்தில் இருந்து திருச்சியை நோக்கி வந்த அரசு பேருந்து மீது காவலர் விவேக் சென்ற பைக் மோதியுள்ளது. இதில் தூக்கி விசப்பட்ட காவலர் 25 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்து உடலில் பலத்த காயமடைந்துள்ளது. இதனையடுத்து உயிருக்கு போராடிய விவேக்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

துடி துடித்து பலியான காவலர்
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் விவேக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
