விருதுநகர் கோவில் காவலாளிகள் இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நாகேந்திரனை காவல் துறையினர் சுட்டு பிடித்தனர். மற்றொரு குற்றவாளி தப்பியோடிய நிலையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தை அடுத்த தேவதானத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயிலின் இரவு காவலர்களாக பேச்சிமுத்து, சங்கர பாண்டியன் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 10ம் தேதி இரவு வழக்கம் போல் இரவு பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து செவ்வாய் கிழமை காலை பணி மாறுதலுக்காக வந்த பகல் நேர காவலாளி, இரவு காவலாளிகள் இருவரும் கொலை செய்யப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கோவில் உண்டியலில் இரு்த நகை, பணம் உள்ளிட்டவற்றைக் கொள்ளை அடிக்கும் போது காவலாளிகள் இருவரும் தடுக்க முயன்றதால் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர். மேலும் இந்த கொலையில் உள்ளூரைச் சேர்ந்த நபர்கள் தொடர்பு இருக்கலாம் என்றும் காவல் துறையினர் சந்தேகம் அடைந்தனர்.
மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிவில் நாகராஜ் என்பவர் தான் இரட்டை கொலையை செய்தார் என்பதை காவல் துறையினர் உறுதிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து நாகராஜை காவல் துறையினர் கைது செய்ய முற்பட்ட நிலையில் அவர் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தினார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் குற்றவாளியை காலில் சுட்டு பிடித்தனர்.
வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி தப்பி ஓடிய நிலையில் அவரை பிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
