கோவை கார் வெடி விபத்து சம்பவம்..! நெல்லையில் 4 பேரிடம் போலீசார் விசாரணை
கோவை கார் வெடிவிபத்து சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நெல்லையில் 4 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை .
கோவை கார் வெடி விபத்து
கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி அதிகாலையில் நடைபெற்ற கார் குண்டு வெடி விபத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஜமேசா முபின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் வெடி பொருட்களுக்கு தேவையான வேதி பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்து உபா சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் போலீசார் விசாரணை
இந்தநிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பந்தமாகவும், மேலும் தீவிரவாத தொடர்பு தொடர்பாகவும் காதர் மூப்பன் தெருவை சார்ந்த சாஹிப் முகமது அலி(35) சையது முகமது புகாரி(36) முகமது அலி(38) முகமது இப்ராஹிம்(37) ஆகிய நான்கு பேர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. நான்கு பேர் வீடுகளிலும் தனித்தனியாக கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டது. . இந்த சோதனையில் நான்கு பேரின் செல்போன் மற்றும் குடும்பத்தினர் செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து அந்த செல்போனில் உள்ள எண்கள் அனைத்தையும் தங்களது கணினியில் சேகரித்து கொண்டனர்.
நான்கு பேர் வீடுகளிலும் சுமார் 4 மணிநேரம் நடைபெற்ற சோதனையின் காரணமாக மேலப்பாளையம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது . சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லையென தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை திருவிழாவில் வெடிகுண்டு வெடித்தது சம்பந்தமாக இவர்களிடம் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதையும் படியுங்கள்