புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி, கரூரில் நடந்த விஜய் கூட்ட நெரிசல் உயிரிழப்புகளுக்குத் தமிழக அரசும் காவல்துறையுமே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார். குறுகிய இடத்தை ஒதுக்கியது சம்பவத்துக்குக் காரணம் என்றும் கூறியுள்ளார்.
கரூரில் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் 39 பேர் மரணம் திமுக அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். உயிரிழப்புகளுக்குத் தமிழக அரசும், காவல்துறையுமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கரூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில், "நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களின் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், முதியோர் என 40-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தாருக்குப் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்றார்.
குறுகிய இடத்தை ஒதுக்கியது ஏன்?
"திரை உலகின் பிரபலம் என்பதாலும், புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளதாலும் அவரது நிகழ்ச்சிக்குக் கட்டுக்கடங்காத கூட்டம் சேர்வது இயல்பு. ஆனால், துவக்கத்தில் கரூரில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பிறகு, வேண்டா வெறுப்பாக 22 அடி அகலம் மற்றும் 200 அடி நீளம் மட்டுமே உள்ள மிகக் குறுகலான சாலையான வேலுச்சாமிபுரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு எவ்வளவு கூட்டம் வரும் என்று காவல்துறைக்குத் தெரிந்திருந்தும், அக்குறுகலான இடத்தை ஒதுக்கியது ஏன்?"
காவல்துறையின் நிர்ப்பந்தமே காரணம்:
"விஜய் அவர்களின் வாகனம் வேலுச்சாமிபுரத்தின் நுழைவுப் பகுதியில் நிறுத்தப்பட்டுப் பேச அனுமதித்திருந்தால் கூட, இவ்வளவு நெரிசல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிரச்சாரக் கூட்டத்தின் நெரிசல் நிறைந்த மையப் பகுதிக்குள் அவரது பிரச்சார வாகனத்தைச் செலுத்தச் சொல்லி, காவல்துறை நிர்ப்பந்தம் கொடுத்ததே இத்தனை பேர் மரணமடையக் காரணமாகியுள்ளது!"
அரசும், காவல்துறையுமே பொறுப்பு!
"கூட்ட அனுமதி வழங்குவதில், தமிழ்நாடு அரசு ஆளுங்கட்சிக்கு ஓர் அளவுகோலும், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு அளவுகோலும் கொள்ளக் கூடாது; காவல்துறை நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். இந்த உயிரிழப்புகளுக்குத் தமிழக அரசும், காவல்துறையுமே பொறுப்பேற்க வேண்டும்" என்று டாக்டர். கிருஷ்ணசாமி குறிப்பிட்டார்.
