விவசாயக் கடன் தள்ளுபடி, மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு, மாட்டிறைச்சிக்கு தடை உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக விவசாயிகள் சென்னை மெரினா மற்றும் தஞ்சை பெரிய கோவில் பகுதியில் போராட்டம் நடத்த திரளுவார்கள் என தகவல் கிடைத்ததையடுத்து அந்த இரண்டு இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் லட்சக்கணக்கானோர் தன்னெழுச்சியாக திண்டனர். இளைஞர்களும், மாணவர்களும் நடத்திய இந்த போராட்டத்தால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இந்த போராட்டத்தை அடுத்து மெரினாவில் போராட்டம் நடத்தவோ,கூடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விவசாயிக்ள் கடன் தள்ளுபடி, ஹைட்ரோ கார்பன், மாட்டிறைச்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மெரினாவிலும், தஞ்சை பெரிய கோவில் அருகிலும் விவசாயிகளும், இளைஞர்களும் இணைந்து பேரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளதாக வாட்ஸ்அப் மூலம் தகவல் பரவி வருகிறது.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக மேலும் பலர் கூடுவர் என்பதாலும், மெரினாவில் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். வாலாஜா சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதே போல் விவசாயிகளுக்கான போராட்டம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவி வருவதால் தஞ்சை பெரியகோவிலை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

ஏற்கனவே சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள்  போலீசார் தங்களை கைது செய்தால் நிர்வாண போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.