பசி என்பது எல்லா மனிதர்க்கும் பொதுவானது, பசியின் கொடுமையை அறிந்தவர்க்கு மட்டுமே உணவின் அருமை தெரியும்.அதனாலேயோ என்னவோ தான் நம் முன்னோர்கள் அப்போதே தானங்களில் சிறந்தது அன்னதானம் என்று கூறி இருக்கின்றனர்.  தனக்கு பசிக்கிறது என்பதை கூட உணர தெரியாத , பசிக்கிறது என சொல்ல தெரியாத குழந்தையை போன்றவர்கள் தான் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.

அப்படி ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு காவல் துறை உதவி ஆய்வாளர் உணவு ஊட்டிவிட்ட புகைப்படம் ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் வீரக்கோயில் எனும் பகுதியில்  மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் மயங்கிய நிலையில் இருந்திருக்கிறார். இதனால் கலக்கமடைந்த பொதுமக்கள் , ஆம்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். 


இந்தத் தகவலை அறிந்ததும் ஆம்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயகுமார்  அந்த நபரை காண அப்பகுதிக்கு விரைந்து சென்றிருக்கிறார்.
அங்கு சென்று பார்த்த போது தான்  பல நாட்களாக உணவு எதுவும் சாப்பிடாததால் அந்த நபர் சோர்வாகி மயங்கிய விவரம் அவருக்கு தெரியவந்திருக்கிறது. 

தொடர்ந்து மயக்க நிலையில் இருந்த அந்த நபருக்கு, காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் அருகில் இருந்த உணவகத்தில் தன் சொந்த செலவில் உணவு மற்றும் தண்ணீர் வாங்கி வந்து , தன் கையாலேயே  ஊட்டியும் விட்டிருக்கிறார். 
பசிமயக்கத்தில் இருந்த அந்த நபரும் விஜயகுமார் தந்த உணவை ஆசையுடன் சாப்பிட்டிருக்கிறார். இந்த காட்சி அப்பகுதி மக்களை நெகிழச்செய்திருக்கிறது. 

உணவு உண்ட பிறகு சற்று தெம்பாக காணப்பட்டாலும், அவரது உடல் நிலை இன்னும் தேறிவரவேண்டும் எனும் நோக்கில் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார் விஜயகுமார். அங்கு சிகிச்சை முடிந்து அவர் திரும்பிய பிறகு காப்பகத்தில் சேர்த்துவிடவும் ஏற்பாடு செய்திருக்கிறாராம் இந்த மனிதநேயம் மிக்க காவலர்.