சென்னையில் போராட்டம் நடக்க வாய்ப்புள்ள அனைத்து இடங்களையும் கண்காணித்து கொண்டிருக்க போலீசாருக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆணை பிறப்பித்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மெரினாவில் போராட்டம் நடத்த  இளைஞர்கள் ஒன்று கூட இருப்பதாக தகவல் வெளியானது. 

இதையடுத்து மெரினாவில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் போராட்டம் எங்கேயாவது நடக்கிறதா என்பதை சோதனை செய்தனர். 

அப்போது, விவேகானந்தர் இல்லம் எதிராக சிலர் ஒன்று கூடி  போராட்டத்தில் ஈடுபட்டு  வந்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக  மெரினாவில்  சில இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கடற்கரை ஒட்டியுள்ள பகுதியில் நின்றவாறு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என  பதாகைகளை  கையில் ஏந்தியவாறு போராட்டம் நடத்தினர். 

இதைப்பார்த்த போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்து அழைத்து சென்றனர். 

அதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர அவசரமாக 250 கும் மேற்பட்ட, போலீசார் மெரீனா கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

இந்நிலையில்,  சென்னையில் போராட்டம் நடக்க வாய்ப்புள்ள அனைத்து இடங்களையும் கண்காணித்து கொண்டிருக்க போலீசாருக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆணை பிறப்பித்துள்ளார்.