Police beaten Communist members Six sufferers suffered terrible confrontation ...
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அணிவகுப்பில் தொண்டர்கள் மீது காவலாளர்கள் தடியடி நடத்தியதால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பயங்கரமாக மோதலால் சிறுவன் உள்பட ஆறு பேர் பலத்த காயம் அடைந்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு தூத்துக்குடியில் கடந்த 17-ஆம் தேதி தொடங்கி நேற்று வரை நடைப்பெற்றது. இந்த மாநாட்டின் நிறைவு நாளான நேற்று கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
அந்த மாநாட்டில் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரின் செந்தொண்டர் அணிவகுப்பு நேற்று மாலை நடந்தது.
தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே தொடங்கிய அணிவகுப்புக்கு வரவேற்புக்குழு தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அர்ச்சுனன், மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று கொடியசைத்து அணிவகுப்பை தொடங்கி வைத்தார். இதில் மாநிலம் முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சிவப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
அணிவகுப்பு பாளையங்கோட்டை ரோடு, அண்ணாநகர், எட்டயபுரம் ரோடு வழியாக பொதுக்கூட்ட திடலை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அண்ணாநகர் 7-வது தெரு விலக்கு அருகில் அணிவகுப்பு வந்தபோது, ஒருநபர் மோட்டார் சைக்கிளில் அந்த அணிவகுப்பை கடக்க முயன்றார்.
அவரைக் கட்சித் தொண்டர்கள் தடுத்து நிறுத்தியபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளர்கள் அந்த மோட்டார் சைக்கிளை அணிவகுப்பை கடந்துச் செல்ல அனுமதிக்குமாறு தொண்டர்களிடம் கூறினர். அப்போது காவலாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றியதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு உடனே காவலாளர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு கடை முன்பு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த கம்புகளை எடுத்துத் தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் தொண்டர்களுக்கும், காவலாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இதில் காவலாளர்கள் தாக்கியதில் மதுரையைச் சேர்ந்த சேதுராம் மகன் சோலை பெருமாள் (34), திருப்பூர் வேலம்பாளையத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் விமல் (23), திண்டுக்கல்லை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் விஷ்ணுவர்த்தன் (30), திருப்பூரை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் அகிலேஷ் (5) ஆகிய நால்வருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதேபோன்று தொண்டர்கள் தாக்கியதில், தென்பாகம் காவல் ஏட்டு சேகர், ஆயுதப்படை காவலர் ராம்சுந்தர் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 2 காவலர்கள், உள்பட 4 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், சிறுவன் உள்பட 2 பேர் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையே தொண்டர்களில் சிலர், காவல் வாகனம் மீது கல் மற்றும் கம்புகளை வீசி தாக்கினர். அதன்பின்னர் அவர்கள் அண்ணா நகர் பிராதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் மறியலில் ஈடுபட்ட தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அரை மணி நேரத்துக்கு பிறகு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அணிவகுப்பு மீண்டும் தொடங்கி நடந்து முடிந்தது.
