நீலகிரி

நீலகிரியின் குறுகிய மலைப்பாதையில் பொக்லைன் இயந்திரம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனால் அந்த வழியில் மூன்று மணி நேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் நடுசாலையில் நின்று தவித்தனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை மலைப்பாதை என்பதால் ஆபத்தான வளைவுகள் அதிகம் உள்ளது. 

கேரளா - கர்நாடகா மட்டுமின்றி வடமாநில சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் கூடலூர் மலைப்பாதை வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புவதால் வாகனங்கள் அதிகளவு இயக்கப்பட்டு வருகிறது. 

எனினும், மலைப்பாதையில் வாகனங்களை இயக்கும் முறைகள் குறித்து சமவெளி பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் பின்பற்றுவதே இல்லை. இதனால் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில் கோயம்புத்தூரில் இருந்து ஊட்டி வழியாக கூடலூருக்கு நேற்று பொக்லைன் இயந்திரம் வந்து கொண்டிருந்தது. அதனை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஓட்டி வந்தார். 

நடுவட்டம் அருகே தவளமலை காட்சிமுனை பகுதியில் வந்தபோது காலை 9.30 மணிக்கு திடீரென பொக்லைன் இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து நடுசாலையில் கவிழ்ந்தது. அப்போது இயந்திரத்தில் இருந்த ஆயில் சாலையில் வழிந்தோடியது. மேலும் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்த நடுவட்டம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன காவல் உதவி ஆய்வாளர் ராஜாமணி உள்ளிட்ட காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குறுகிய மலைப்பாதை என்பதால் பொக்லைன் இயந்திரத்தை அகற்ற முடியாமல் திணறிய காவலாளர்கள் கூடலூரில் இருந்து கிரேன் கொண்டுவந்து பகல் 12.30 மணிக்கு பொக்லைன் இயந்திரத்தை அகற்றினர். 

அதன்பின்னர் வாகன போக்குவரத்து சீரானது. இந்த விபத்தால் கேரளா - கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே மூன்று மணி நேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் மைசூர், பெங்களூரு செல்ல வேண்டிய பயணிகள், மக்கள் சாலையில் நின்று தவித்தனர்.