Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் உலகத் தரத்தில் 34 ரயில் நிலையங்கள்! பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் 1,318 ரயில் நிலையங்களை மேம்படுத்த 'அம்ருத் பாரத் ரயில் நிலையம்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

PM Modi to inaugurate 34 world class railway stations in Tamil Nadu today sgb
Author
First Published Feb 26, 2024, 9:49 AM IST

'அம்ருத் பாரத் ரயில் நிலையம்' திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்களை உலகத் தரத்திற்கு மேம்படுத்தும் திட்டப் பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க இருக்கிறார்.

இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ரயில் நிலையங்களை மேம்படுத்த 'அம்ருத் பாரத் ரயில் நிலையம்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ரயில் நிலைய வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிப்பது, இலவச வைஃபை, லிஃப்ட், எலவேட்டர், காத்திருப்பு அறை ஆகிய வசதிகள் இந்த ரயில் நிலையங்களில் இருக்கும்.

இந்த ரயில் நிலையங்களில் 'ஒரு ஸ்டேஷன்; ஒரு தயாரிப்பு' திட்டத்தின் மூலம் உள்ளூா் தயாரிப்புகளை பிரபலப்படுத்தவும் விற்பனை செய்யவும் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்படும்.

'அம்ருத் பாரத் ரயில் நிலையம்' திட்டத்தின் கீழ் 1,318 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் முதல் கட்டமாக 2023ஆம் ஆண்டு 508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இரண்டாம் கட்டமாக இன்று 554 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழ்நாட்டின் 34 ரயில் நிலையங்களும் அம்ருத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன. தெற்கு ரயில்வே சாா்பில் தமிழ்நாட்டில் 32 ரயில் நிலையங்களும், தென்மேற்கு ரயில்வே சாா்பில் தருமபுரி, ஒசூா் ஆகிய 2 ரயில் நிலையங்களும் என மேம்படுத்தப்படும்.

சென்னை கோட்டத்தில் 7 ரயில் நிலையங்கள், மதுரை கோட்டத்தில் 13 ரயில் நிலையங்கள், திருச்சி கோட்டத்தில் 4 ரயில் நிலையங்கள், சேலம் கோட்டத்தில் 8 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட இருக்கின்றன. ரூ.270 கோடியில் திருநெல்வேலி ரயில் நிலையமும், ரூ.118 கோடியில் கும்பகோணம் ரயில் நிலையமும் ஒரே கட்டமாக தரம் உயர்த்தப்பட உள்ளன. மற்ற ரயில் நிலையங்களில் இத்திட்டப் பணிகள் பல கட்டங்களாக 2 ஆண்டுகள் நடைபெறும் என்று தெரிகிறது.

ரயில்வே கோட்டம் வாரியாக நிதி ஒதுக்கீடு:

சென்னை கோட்டத்தின் கீழ் சென்னை கடற்கரை ரூ. 14.58 கோடி, கிண்டி ரூ. 13.50 கோடி, அம்பத்தூா் ரூ. 21.57 கோடி, மாம்பலம் ரூ. 14.70 சென்னை பூங்கா ரூ. 10.68 கோடி, பரங்கிமலை ரூ. 14.15 கோடி நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளன.

மதுரை கோட்டத்தில் பழனி ரூ. 13.88 கோடி, திருச்செந்தூா் ரூ. 17.50 கோடி, அம்பாசமுத்திரம் ரூ. 10.81 கோடி, காரைக்குடி ரூ. 13.91 கோடி, கோவில்பட்டி ரூ. 12.72 கோடி, மணப்பாறை ரூ. 10.11 கோடி, புதுக்கோட்டை ரூ. 14.48 கோடி, ராமநாதபுரம் ரூ. 11.95 கோடி, ராஜபாளையம் ரூ. 11.70 கோடி, பரமக்குடி ரூ. 10.56 கோடி, திண்டுக்கல் ரூ. 22.85 கோடி, தூத்துக்குடி ரூ. 12.37 கோடி, திருநெல்வேலி ரூ. 270 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

பாலக்காடு கோட்டத்தில் பொள்ளாச்சிக்கு ரூ. 10.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி கோட்டத்தில் திருவண்ணாமலை ரூ. 8.27 கோடி, திருவாரூா் ரூ. 8.69 கோடி, விருத்தாசலம் ரூ. 9.17 கோடி, கும்பகோணம் ரூ. 118 கோடி மேம்பாட்டு நிதியைப் பெறும்.

சேலம் கோட்டத்தில் ஈரோடு ரூ. 38.09 கோடி, மேட்டுப்பாளையம் ரூ. 14.81 கோடி, மொரப்பூா் ரூ. 12.18 கோடி, பொம்மிடி ரூ. 11.54 கோடி, திருப்பத்தூா் ரூ. 13.88 கோடி, சின்ன சேலம் ரூ. 11.85 கோடி, நாமக்கல் ரூ. 13.28 கோடி, கோவை வடக்கு ரூ. 11.55 கோடி நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios