தமிழ்நாட்டின் பெருமைமிகு மரபு: பிரதமர் மோடி நினைவு கூர்ந்த இரண்டு தமிழர்கள்!
கன்னியாகுமாரியின் ஏ.கே. பெருமாள், எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோரை நினைவு கூர்ந்து மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்றும் நாட்டு மக்களிடையே மான் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் பெருமைமிகு மரபோடு தொடர்புடைய இரண்டு மிகவும் உத்வேகமளிக்கும் முயற்சிகளை முன்வைக்க விரும்புவதாக குறிப்பிட்டார்.
கன்னியாகுமாரியின் ஏ.கே. பெருமாள், எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோரை நினைவு கூர்ந்து பிரதமர் மோடி பேசினார். “தமிழ்மொழியின் புகழ்மிக்க எழுத்தாளரான சகோதரி சிவசங்கரியை பற்றித் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவர் ஒரு செயல்திட்டத்தை புரிந்திருக்கிறார் – Knit India, Through Literature. இதன் பொருள் என்னவென்றால், இலக்கியம் வாயிலாக தேசத்தை ஓரிழையில் கோர்ப்பது என்பதுதான். இவர் இந்தச் செயல்திட்டம் தொடர்பாக கடந்த 16 ஆண்டுகளாகச் செயலாற்றி வருகிறார். இந்தச் செயல்திட்டம் வாயிலாக இவர் பாரதநாட்டு மொழிகள் 18இல் எழுதப்பட்ட இலக்கியங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார்.” என்றார்.
மேலும், “கன்னியாகுமாரி தொடங்கி கஷ்மர் வரையும், இம்ஃபால் தொடங்கி ஜைசால்மேர் வரையும், தேசம் நெடுக, பல்வேறு மாநிலங்களின் எழுத்தாளர்கள்-கவிஞர்களை நேர்முகம் காண்பதற்காக சிவசங்கரி பல பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். பயணக் கட்டுரைகளோடு கூட இவற்றைப் பதிப்பித்தும் இருக்கிறார். இது தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் இருக்கிறது. இந்தச் செயல்திட்டத்தின் நான்கு பெரிய தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன, ஒவ்வொரு தொகுதியும் பாரதத்தின் தனித்தனி பாகத்திற்கு என அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இவருடைய இந்த உறுதிப்பாட்டு சக்தி குறித்து எனக்குப் பெருமையாக இருக்கிறது.” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
அதேபோல், கன்னியாகுமாரியின் ஏ.கே. பெருமாளுடைய பணி மிகவும் கருத்தூக்கம் அளிக்கவல்லதாக இருக்கிறது என்ற பிரதமர் மோடி, “தமிழ்நாட்டின் கதை சொல்லும் பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் போற்றத்தக்க பணியை அவர் செய்திருக்கிறார். இவர் தனது இந்தக் குறிக்கோளோடு, கடந்த 40 ஆண்டுகளாக இணைந்திருக்கிறார். இதன் பொருட்டு இவர் தமிழ்நாட்டின் பல்வேறு பாகங்களுக்கும் பயணிக்கிறார், நாட்டுப்புற கலை வடிவங்களைத் தேடித்தேடி, அவற்றைத் தனது புத்தகத்தில் இடம்பெறச் செய்கிறார். இவர் இதுவரை, கிட்டத்தட்ட 100 புத்தகங்களை எழுதியிருக்கிறார் என்ற செய்தி உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம்.” என்றார்.
இதைத் தவிர பெருமாளுக்கு மேலும் ஒரு பேரார்வமும் உண்டு என குறிப்பிட்ட பிரதமர் மோடி, “தமிழ்நாட்டின் கோயில் கலாச்சாரம் பற்றி ஆய்வு செய்வது இவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இவர் தோல்பாவைக் கூத்து பற்றியும் நிறைய ஆய்வுகளைச் செய்திருக்கிறார், இதனால் ஆதாயம் வட்டார நாட்டுப்புற கலைஞர்களுக்கும் கிடைத்து வருகிறது.” என்றார்.
விநியோகச் சங்கிலி இயக்கத்தில் ஒத்துழைப்பு: ஜப்பான் ஜி7 கூட்டத்தில் அமைச்சர் வலியுறுத்தல்!
“சிவசங்கரி, ஏ.கே. பெருமாள் இவர்கள் இருவரின் முயற்சிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவன. பாரதம் தனது கலாச்சாரத்தைப் பாதுகாக்கக்கூடிய அனைத்து முயற்சிகள் குறித்தும் பெருமிதம் அடைகிறது, இது நமது தேச ஒற்றுமையை மேலும் பலப்படுத்துவதோடு, தேசத்தின் பெயரையும், தேசத்தின் கௌரவத்தையும், அனைத்தையும் ஓங்கச் செய்யும்.” என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
தீபாவளி பண்டிகையின்போது, பாரதத்தை தற்சார்புடையதாக ஆக்குங்கள், இந்தியாவில் தயாரிப்பதையே தேர்ந்தெடுங்கள் என்றும் பிரதமர் மோடி அப்போது வேண்டுகோள் விடுத்தார்.