உத்திரமேரூர் கல்வெட்டை மேற்கோள் காட்டிப் பேசிய பிரதமர் மோடி!
தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசியுள்ளார்
டெல்லியில் உள்ளஷோபூமியில் 9ஆவது ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டை (பி20) பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்திற்கான நாடாளுமன்றங்கள்' என்ற கருப்பொருளுடன் இந்த உச்சி மாநாட்டை இந்திய நாடாளுமன்றம் நடத்துகிறது. இந்த நிகழ்வில் ஜி20 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் அழைப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 2023ஆம் ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டில் உறுப்பினராகியுள்ள ஆப்பிரிக்க நாடுகளின் நாடாளுமன்றம் முதல் முறையாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளது.
பி20 மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ஜனநாயகத்தின் தாய் என்பது மட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் அறியப்படும் நாட்டில் பி20 உச்சிமாநாடு நடைபெறுகிறது என்று கூறினார். ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான இந்தியாவின் வேதங்கள் மற்றும் சாத்திரங்களில் மற்றும் குழுக்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன, அவற்றில் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக கூட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
அனைத்துப் பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய ஆய்வு: தமிழக அரசு தகவல்!
இந்தியாவின் பழைய வேதமான ரிக்வேதத்தைப் பற்றி பேசிய பிரதமர், 'நாம் ஒன்றாக நடக்க வேண்டும், ஒன்றாகப் பேச வேண்டும், நம் மனம் ஒன்றிணைய வேண்டும்' என்று பொருள்படும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தை குறிப்பிட்டார். கிராம அளவிலான பிரச்சனைகள், இத்தகைய கூட்டங்களில் விவாதங்கள் மூலம் தீர்க்கப்பட்டது, கிரேக்க தூதர் மெகஸ்தனிஸுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது, அவர் அதைப் பற்றி விரிவாக எழுதினார் என்று பிரதமர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் உத்திரமேரூரில் உள்ள 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டையும் பிரதமர் மோடி அப்போது சுட்டிக்காட்டினார். அந்த கல்வெட்டில் கிராம சட்டமன்ற விதிகள் மற்றும் நெறிமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. “1200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டில் ஒரு உறுப்பினரை தகுதி நீக்கம் செய்வதற்கான விதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன” என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
இந்தியாவில் 12 ஆம் நூற்றாண்டிலிருந்து நடந்து வரும் அனுபவ் மந்தப்பா பாரம்பரியம் குறித்துப் பேசிய பிரதமர், மேக்னா கார்ட்டா உருவாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, அனைத்து சாதி, மற்றும் மதத்தைச் சேர்ந்த மக்களும் தங்கள் எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த விவாதங்கள் ஊக்குவிக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டை குறிப்பிட்டு பிரதமர் பேசியது நமக்கெல்லாம் பெருமை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்லியில் நடைபெற்ற, ஜி20 நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்கள் பங்குபெறும் ஒன்பதாவது மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, கிராமசபை குறித்த விதிகள், வழிமுறைகள் மற்றும் உறுப்பினர்களின் தகுதி மற்றும் தகுதி நீக்க விதிமுறைகள் அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ள 1200 ஆண்டுகள் பழமையான உத்திரமேரூர் கல்வெட்டை மேற்கோள் காட்டிப் பேசியது நமக்கெல்லாம் பெருமை தருவதாகும்.” என்று பதிவிட்டுள்ளார்.