அரிச்சல் முனை கடற்கரையில் பிராணாயாமம் செய்து பூக்கள் தூவி வழிபட்ட பிரதமர் மோடி!
அரிச்சல் முனை கடற்கரையில் பிராணாயாமம் செய்து பூக்கள் தூவி பிரதமர் மோடி வழிபட்டார்.
ராமேஸ்வரம் சென்றுள்ள பிரதமர் மோடி, அரிச்சல் முனை கடற்கரையில் பிராணாயாமம் செய்து பூக்கள் தூவி வழிப்பட்டார். அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, 3 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் நேற்று புனித நீராடி, கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடினார். பின்னர், ராமநாத சுவாமி கோயிலில் அவர் தரிசனம் செய்தார்.
தொடர்ந்து, இன்று காலை தனுஷ்கோடி சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள நினைவுச்சின்னத்தில் மரியாதை செய்தார். பின்னர் கடற்கரையை சுற்றிப்பார்த்த அவர், பூக்கள் தூவி வழிபட்டார். மேலும், கடற்கரையில் அமர்ந்து சிறிது நேரம் பிரதமர் மோடி பிராணாயாமம் செய்தார். அதன்பிறகு, அங்கிருந்து கோதண்ட ராமர் கோயிலுக்கு சென்று அவர் சுவாமி தரிசனம் செய்தார்.
தனுஷ்கோடி புறப்பட்ட பிரதமர் மோடி: கோதண்ட ராமர் கோயிலில் தரிசனம்!
ராமேசுவரத்தில் உள்ள அக்னி (கடல்) தீர்த்தமும், தனுஷ்கோடி அரிச்சல் முனையில் சேது (கடல்) தீர்த்தமும் பிரதான தீர்த்தங்களாகும். இந்த தீர்த்தங்களில் நீராடுவதால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் இங்கு புனித நீராட இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் ராமேசுவரம் வருகின்றனர்.
தனுஷ்கோடியின் தென்முனைப் பகுதியான அரிச்சல்முனையில் ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கமும் நந்தியும் உள்ள ஒரு சிறிய கோயில் உள்ளது. இங்கு ராமர், சீதையுடன் லட்சுமணரும், அனுமனும் உடன் அருளுகிறார்கள். அரிச்சல்முனைப் பகுதியில் இருந்தே ஸ்ரீராமர் இலங்கையின் மன்னார் பகுதிக்கு சேது பாலம் கட்டத் திட்டமிட்டார் என கூறப்படுகிறது.