தனுஷ்கோடி புறப்பட்ட பிரதமர் மோடி: கோதண்ட ராமர் கோயிலில் தரிசனம்!
ராமேஸ்வரம் அரிச்சல்முனை, தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோயிலில் பிரதமர் மோடி தாரிசனம் செய்யவுள்ளார்
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி 11 நாட்கள் கடும் விரதம் இருந்து வருகிறார். அத்துடன், நாட்டில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார். குறிப்பாக, ராமருடன் தொடர்புடைய கோயில்களில் பிரதமர் மோடி தரிசனம் செய்து வருகிறார்.
அந்த வகையில், கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பது, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் வழிபடுவது போன்ற நிகழ்ச்சிகளுக்காக 3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார்.
அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தமிழர் பாரம்பரிய வேட்டி, சட்டை, பட்டு அங்கவஸ்திரம் அணிந்து திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் நேற்று தரிசனம் செய்தார். அங்கு கம்ப ராமாயண சிறப்பு சொற்பொழிவு மற்றும் பாராயணத்தை கேட்டு மகிழ்ந்தார்.
பின்னர், திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி, அக்னி தீர்த்தக் கடலில் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து புனித நீராடினார். அங்கிருந்து ராமநாத சுவாமி கோயிலுக்குச் சென்றார். அங்கு அவருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடிய பின்னர், ராமநாத சுவாமி, பர்வதவர்தினி அம்பாள் சந்திதிகளில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நேற்றைய தினம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சென்றதை மறக்க முடியாது. கோயிலின் ஒவ்வொரு பகுதியிலும் காலத்தால் அழியாத பக்தி இருக்கிறது.” என பதிவிட்டுள்ளார்.
ராமநாத சுவாமி கோயிலில் இருந்து வெளியே வந்த பிரதமர், அங்கிருந்து ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்று தங்கினார். இந்த நிலையில், இன்று காலை ராமகிருஷ்ண மடத்திலிருந்து காரில் பிரதமர் மோடி தனுஷ்கோடி புறப்பட்டு சென்றார். ராமர் பாலம் இருக்கும் இடம் என்று கூறப்படும் அரிச்சல்முனை கடற்கரையில் சிறப்பு பூஜை செய்யும் அவர், தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யவுள்ளார்.
தரிசனத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து காரில் ராமேசுவரம் திரும்பி ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்று, விமானம் மூலம் பிற்பகலில் பிரதமர் மோடி டெல்லி செல்லவுள்ளார்.