விவேகானந்தர் பாறையில் தியானம்: கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர் மோடி!
விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் தியானம் செய்ய பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்தடைந்தார்
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு வருகிற ஜூன் 1ஆம் தேதி (நாளை மறுநாள்) நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளன. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிகட்ட தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்துள்ளது. பஞ்சாபில் தனது இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமாரி வந்தடைந்தார். தனி விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகை புரிந்தார். பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், படகு மூலம் கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு பிரதமர் மோடி சென்றார். இன்று மாலை முதல் ஜூன் 1ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு விவேகானந்தர் பாறையில் தங்கியிருந்து அங்குள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் மேற்கொள்ளவுள்ளார். முன்னதாக, கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார்.
Loksabha Elections 2024 நாடு முழுவதும் ஓய்ந்த பிரசாரம்: நாளை மறுதினம் இறுதிகட்ட வாக்குப்பதிவு!
பிரதமர் மோடி ஒவ்வொரு தேர்தல் பிரசாரங்களின் முடிவிலும் பிரதமர் மோடி ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரசார முடிவின்போது, அவர் கேதார்நாத்திற்குச் சென்றிருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரசார முடிவின்போது, சிவாஜியின் பிரதாப்கரை பிரதமர் மோடி பார்வையிட்டார். அதன் தொடர்ச்சியாக, 2024 மக்களவைத் தேர்தல் பிரசார முடிவின்போது கன்னியாகுமரி வந்துள்ள பிரதமர் மோடி, விவேகானந்தர் தியானம் செய்த அதே இடத்தில் மே 30ஆம் தேதி மாலை முதல் ஜூன் 1ஆம் தேதி மாலை வரை இரவு பகலாக தியானம் மேற்கொள்ளவுள்ளார்.