திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தேர்வு முடிந்து வீடு திரும்பிய பிளஸ்-2 மாணவியை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், மகளை மீட்டுத் தரக் கோரியும்  மாணவியின் பெற்றோர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பி.எல்.தண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது 17 வயது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார். 

கடந்த சில நாள்களுக்கு முன்பு தேர்வு எழுதச் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத நிலையில் அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

காவலாளர்கள் மேற்கொண்ட விசாரணையில், "தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த மாணவியை செங்கத்தை அடுத்த பொன்னி தண்டா கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகன் ராம்ராஜ், கணேசன் மகன் பவன்குமார், பி.எல்.தண்டா கிராமத்தைச் சேர்ந்த பூபதி மகன் ரமேஷ் ஆகியோர் சேர்ந்து வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றனர்" என்பது தெரிய வந்தது.

ஆனால், இந்த கடத்தல் தொடர்பாக காவலாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடத்தப்பட்ட பெண்ணின் தந்தை ரமேஷ், அவரது மனைவி சுசிலா மற்றும் உறவினர்கள் கடந்த திங்கள்கிழமை திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னியிடம் மனு அளித்தனர். 

அந்த மனுவில், "தனது மகளை மீட்டுத் தரக் கோரி" இருந்தனர் அவரது பெற்றோர். மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்று உறுதியளித்தார்.