- Home
- Tamil Nadu News
- Palani Temple: அடேங்கப்பா.. பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா? தங்கம் எவ்வளவு தெரியுமா?
Palani Temple: அடேங்கப்பா.. பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா? தங்கம் எவ்வளவு தெரியுமா?
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இரண்டு நாட்கள் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில், ரொக்கமாக ரூ.5.80 கோடி வசூலானது. இது தவிர, பக்தர்கள் தங்கம், வெள்ளிப் பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் பிற பொருட்களையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உள்ளது. உலகப் பிரசித்தி இக்கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். சாதாரண நாட்களில் சாமியை தரிசனம் செய்ய 3 மணிநேரம் ஆகிவிடும். அதுவும் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள் வந்துவிட்டால் 5 மணிநேரமாகிவிடும்.
தற்போது சபரிமலை சீசன் என்பதால் அதிகளவில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மேலும் நினைத்த காரியம் நிறைவேறிவிட்டால் பக்தர்கள் உண்டியலில் நகை மற்றும் பணத்தை காணிக்கையாக செலுத்தி வருவது வழக்கம். அதன்படி பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இப்பணியில் கல்லூரி மாணவியர்கள், திருக்கோயில் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன், அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில், துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இரண்டு நாட்கள் எண்ணிக்கை முடிவில் பக்தர்களின் காணிக்கை ரொக்கம் ரூபாய் ஐந்து கோடியே 80 இலட்சத்து 86 ஆயிரத்து 687 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 695 கிராம், வெள்ளி 17,979 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 841-ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

