Today plus 2 results published
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. முடிவுகள் வெளியிடப்பட்ட 10 நிமிடங்களில் அவை மாணவ-மாணவிகளின் மொபைல் எண்ணுக்கு அனுப்பிவைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவிகள் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்

இந்த ஆண்டு மாநில அளவில் முதல் மூனறு இடங்களை பிடித்த மாணவர்கள் என்ற ரேங்க் முறை இனி கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக பள்ளிகளுக்கு மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் தேர்வு முடிவுகள் வெளியானதும் பள்ளிகளில் உள்ள தகவல் பலகைகளில் தேர்வு முடிவுகள் ஒட்டப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாவட்ட நூலகங்கள் ஆகியவற்றில் உள்ள கணினிகள் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொண்டனர்.
இதுதவிர, அரசுத் தேர்வுத் துறையின் இணைய தளங்களிலும் தேர்வு முடிவுகளை பார்க்க முடியும்.

இந்நிலையில், இந்த ஆண்டு முதல் செல்போன்கள் மூலம் தேர்வு முடிவுகளை அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுத பதிவு செய்யும் போதே அவர்களின் செல்போன் எண்களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பெற்று, தேர்வுத் துறைக்கு அனுப்பி இருந்தனர்.
தற்போது, அந்த செல்போன் எண்களுக்கு தேர்வுத்துறையே தேர்வு முடிவுகளை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான உடனே மாணவர்களின் செல்போன்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் வரும்.
