தமிழ்நாடு நாள்: அனைத்து மாவட்டங்களிலும் பேரணி, புகைப்பட கண்காட்சி!
தமிழ்நாடு நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் பேரணி, புகைப்பட கண்காட்சி நடைபெறவுள்ளது

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு வருகிற 18ஆம் தேதியன்று அனைத்து மாவட்டங்களிலும் பேரணி மற்றும் புகைப்படக் கண்காட்சி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை தங்களின் மாநில நாளாக கொண்டாடி வருகின்றன. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை, தமிழ்நாடு என்று நமது மாநிலத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயரிட்ட ஜூலை 18ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என கடந்த 2021ஆம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு நாள் வரும் 18ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு நாளை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு வருகிற 18ஆம் தேதியன்று அனைத்து மாவட்டங்களிலும் பேரணி மற்றும் புகைப்படக் கண்காட்சி நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு நாள் ஜூலை 18-ம் நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு (2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக முதல்வர் கலந்துகொண்டார். விழாவில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது.
நடப்பு ஆண்டில் வரும் ஜூலை 18ஆம் தேதி அனைத்து மாவட்டங்களில் “தமிழ்நாடு நாள்” குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. இப்பேரணியில் மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு குறித்த சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக பதாகைகளை ஏந்திச் செல்வார்கள்.
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் கருக்கலைப்பு வாரியம்!
அதேபோன்று “தமிழ்நாடு நாள்” முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரும் அறியும் வகையில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. 18ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களில், இச்சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெறும். அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பு செய்வார்கள்.
சென்னை, மாநிலக் கல்லூரியில் வருகிற 18ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில், அமைச்சர்கள் கலந்து கொண்டு தமிழ்த்தாய் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர். மேலும், தமிழ்நாடு நாள் கருத்தரங்கில் "வளர்க தமிழ்நாடு" எனும் தலைப்பில் சுப.வீரபாண்டியனும், "வாழ்க தமிழ்நாடு" எனும் தலைப்பில் முனைவர் மா.ராசேந்திரனும், "எழுக தமிழ்நாடு" எனும் தலைப்பில் ஆழி செந்தில்நாதனும் உரையாற்ற உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த சிறப்புகளை பொதுமக்கள் அறியும் வண்ணம், சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெற உள்ளது. எனவே, மாணவ / மாணவியர்கள், பொதுமக்கள் அனைவரும் "தமிழ்நாடு நாள்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.