வங்கக்கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல் ஆந்திர மாநிலத்தில் இன்று கரையைக் கடக்கும் நிலையில், சென்னை உட்பட வட தமிழக மாவட்டங்களுக்கு ஆபத்து இல்லை என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக் கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல், ஆந்திரா மாநிலம் மசூலிப்பட்டினம் மற்றும் காக்கி நாடாவுக்கு இடையே, இன்று பிற்பகலுக்குள் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடக்கு கடலோர மாவட்டங்களில், காற்றின் தாக்கம் அதிகமாக இருக்காது என்று வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 

புயல் காரணமாக சென்னையில் பழவேற்காடு, கோரைக்குப்பம் கடலோர பகுதிகளில் காற்று வேகமாக வீசுவதுடன், கடல்நீர் உட்புகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவ கிராம மக்கள், வஞ்சிவாக்கத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடலூரில் கடல் சீற்றத்துடன் 5 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுவதால் வெள்ளி கடற்கரையில் பகுதியில் மக்கள் வெளியேறி வருகின்றனர். அத்துடன், ஒலிபெருக்கி மூலம் கடற்கரைப் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 

நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகாரில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன.  இதையடுத்து, படகுகளை கிரேன் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். கடல் பரப்பில் 26 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டே கரையை நெருங்கி வரும் பெய்ட்டி புயல் இன்று பிற்பகல் காக்கிநாடா அருகே கரையை கடக்க உள்ளது. பெய்ட்டி புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 90 கிலோமீட்டர் முதல் 100 கிலோமீட்டர் வரை இருக்கும் என்றும், அந்த வேகத்தில் காற்று வீசும் பொழுது கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதனால் சென்னையை குளிரால் நடுங்க வைத்த பெய்ட்டி ஆந்திராவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மெரினா, சாந்தோம், பட்டினப்பாக்கம் கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனிடையே, பெய்ட்டி புயல் எதிரொலியால், சென்னையில் வழக்கத்திற்கு மாறாக குளிர்காற்று வீசி வருகிறது. பெய்ட்டி புயல் காரணமாக தமிழகத்தின்‌ வட கடலோரப் பகுதிகளில் ‌கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. 

இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம், கொகிலமேடு, கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பத்திரப்படுத்தியுள்ள மீனவர்கள் வாழ்வாதரமின்றி தவித்து வரும் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.