பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்..! தமிழகம் முழுவதும் 14 பேர் கைது- டிஜிபி
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தமிழகத்தில் நடைபெற்ற 11 வழக்குகளில் 14 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் குண்டு வீச்சு- 14 பேர் கைது
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. இந்தநிலையில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களில் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீடுகள், வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் வீசிய சம்பவங்கள் தொடர்பாக கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி கன்னியாகுமரி, மாவட்டங்களில் 19 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. புலன் விசாரணைக்குப் பின் கீழ்கண்ட 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகர், குனியமுத்தூர் காவல் நிலைய எல்லையில் ஒரு வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்ட கார் மீதும் மற்றும் சுப்புலட்சுமி நகரில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் மீதும் மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சம்பவத்தில் மதுக்கரையைச் சேர்ந்த ஜேசுராஜ் மற்றும் குனியமுத்தூரைச் சேர்ந்த இலியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
குற்றவாளிகள் கைது
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, குமரன் நகர் பகுதியில் கார் மற்றும் ஆட்டோக்களில் மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய பொள்ளாச்சியைச் சேர்ந்த முகமது ரபிக் (வ/26), மாலிக் (எ) சாதிக் பாஷா (வ/32) மற்றும் ரமிஸ் ராஜா (வ/36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சேலம் மாநகரம், அம்மாபேட்டை, காவல் நிலைய எல்லையில் ஒரு வீட்டின் முன்பு மண்ணெண்ணெய் பாட்டிலை வீசிய வழக்கில் செய்து அலி (வ/42) கிச்சி பாளையம் மற்றும் காதர் உசேன் (வ/33) பொன்னாம்மாபேட்டை சேலம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாநகரம் கீரத்துறை காவல் நிலைய எல்லை மேலஅனுப்பானடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கார் ஷேட் அருகில் மண்ணெண்ணெய் பாட்டிலை வீசிய வழக்கில் மதுரை நெல்பேட்டை பகுதியைச் சேர்ந்த சம்சூதீன் (எ) எட்டு பாவா சம்சூதீன் (வ/32) மற்றும் சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த உசேன், ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பாஜக நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..! டெல்லிக்கு அவசரமாக அழைக்கப்பட்ட தமிழக ஆளுநர்
சிறையில் அடைப்பு
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லையில் ஒரு கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மீது மண்ணெண்ணெய் பாட்டிலை வீசிய வழக்கில் சிக்கந்தர், (வ/22) பேகம்பூர், திண்டுக்கல் என்பவர் கைது செய்யப்பட்டார்.ஈரோடு மாவட்டம், ஈரோடு தாலுக்கா காவல் நிலைய எல்லை, டெலிபோன் நகரில் உள்ள மரச்சாமான் கடையில் தீ வைக்க முயற்சித்த குற்ற வழக்கில் ஈரோட்டைச் சேர்ந்த சதாம் உசேன், ஆசிக், ஜாபர் மற்றும் கலில் ரகுமான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுவரை 11 வழக்குகளில் 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்