சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய 6 பேரை கைது செய்துள்ளதாக இணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் அதிகாலையில், சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது, மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பல்வேறு அமைப்பினர் கடும் கண்டம் தெரித்தனர்.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கு இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் நிலை என்னவென்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது என பேசியது.

இதைதொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக தனிப்படை அமைத்து, தீவிர விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து இணை கமிஷனர் அன்பு கூறுகையில், தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 6 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் தீவிரமாக விசாரிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட 6 பேர் மீது கொலை முயற்சி உள்பட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளோம்.

மேலும், காவல் நிலையத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து சரி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக காவல் நிலையத்தில் 6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றார்.