Asianet News TamilAsianet News Tamil

சிறைக் கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்; நம்ம ஊரில் விரைவில் செயல்பாட்டுக்கு வரபோகுது...

Petrol bank run by prisoners Coming soon to function in our town ...
Petrol bank run by prisoners Coming soon to function in our town ...
Author
First Published Jun 13, 2018, 7:31 AM IST


வேலூர்
 
வேலூரில் சிறைக் கைதிகள் நடத்தும் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க முடிவெடுத்துள்ள சிறைத் துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா அதற்கான ஆய்வுகளை செய்தார்.

வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் மத்திய ஆண்கள் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இங்கு, 800–க்கும் மேற்பட்டவர்கள் தண்டனை கைதிகளாகவும், விசாரணை கைதிகளாகவும் உள்ளனர். 

கைதிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க சிறைத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் அவ்வப்போது எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வேலூர் சிறைச்சாலை வளாகத்தில் உள்ள காலி நிலத்தில் கத்திரி, வெண்டை, கொத்தவரை, அகத்திக்கீரை, கரும்பு போன்றவை இயற்கையான முறையில் பயிரிடப்பட்டு, அவை சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

மேலும், சிறையில் விற்பனை மையம் அருகில் முடி திருத்தகம் மற்றும் துணிகளை தேய்த்து தருவதற்கான கடை, உணவகம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இதன் அடுத்த கட்டமாக சிறைக் கைதிகளை கொண்டு பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க சிறை துறை முடிவு செய்துள்ளது. 

அதன்படி, முதற்கட்டமாக சென்னை புழல், வேலூர், கோவை, பாளையங்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் சிறைத் துறை மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் சார்பில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

வேலூரில் தொரப்பாடி காவலர் குடியிருப்பு அருகே சிறை துறைக்குச் சொந்தமான 2000 சதுர அடி இடத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்கப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து நேற்று வேலூரில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைய உள்ள இடத்தை சிறைத்துறைத் தலைவர் மற்றும் சிறைத் துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா ஆய்வு செய்தார். 

அப்போது அவர், "சிறையில் உள்ள நன்னடத்தைக் கைதிகள் மற்றும் சிறையில் இருந்து விடுதலையாகும் கைதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

பெட்ரோல் விற்பனை நிலையம் 24 மணி நேரமும் இயங்கும். அதில் ஏ.டி.எம். மையம், ஆவின் பாலகம், உணவகம் ஆகியவை அமைக்கப்படும். 

கடந்தாண்டு கைதிகள் மூலம் சிறை துறைக்கு ரூ.60 கோடி இலாபம் கிடைத்துள்ளது. பெட்ரோல் விற்பனை நிலையம் அமைத்தால் அதிக லாபம் கிடைக்கும்" என்று அவர் தெரிவித்தார். 

இந்த ஆய்வின்போது இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் வேலூர் மேலாளர் சௌரவ் ஆனந்த், ஜெயில் கண்காணிப்பாளர் (பொறுப்பு) முருகேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios