வரலாற்றில் இருந்து ஜல்லிக்கட்டு ஒருநாள் அகற்றப்படும்…‘பீட்டா’ வின் ஜோஷிபுரா மீண்டும் திமிர் பேச்சு….

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்போம். வரலாற்றில் இருந்து ஜல்லிக்கட்டு போன்ற கொடூரமான விளையாட்டுகள் எதிர்காலத்தில் அகற்றப்படும் என்று பீட்டா விலங்குகள் அமைப்பின் நிர்வாக அதிகாரி பூர்வா ஜோஷிபுரா தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த உச்சநீதிமன்றம் விதித்திருந்த தடையால் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இதையடுத்து, இந்த ஆண்டு மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய அறவழிப் போராட்டத்தால், தமிழக அரசு அவசரச்சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கான தடை நீங்கியுள்ளது.

இந்த தடை நீக்கம், அவசரச் சட்டம் குறித்து பீட்டா அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பூர்வா ஜோஷிபுரா ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு எதிராக தமிழக அரசு அவசரச்சட்டம் கொண்டு வந்தாலும், அந்த போட்டிக்கு எதிராக தொடர்ந்து நாங்கள் செயல்படுவோம். பீட்டா இந்தியா அமைப்பின் நோக்கம் விலங்குகளுக்கு மட்டுமன்றி குழந்தைகள், முதியவர்களுக்கு ஏற்படுகின்ற கொடுமைகளையும் தடுப்பதாகும்.

நாட்டின் பெருமை, ஒழுங்கு நெறி என்பது விலங்குகளை எப்படி நடத்துகிறோம் என்பதைப் பொறுத்தது என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார். ஆனால், ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுகள் மீது மனிதர்கள் பாய்வதும், அவற்றின் வாயில் மதுவை ஊற்றுவது, வாலை வேண்டுமென்றே திருகுவது, கடிப்பது, கண்களில் மிளகாய்பொடியை தூவுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களின் செயல்கள் தான் நாட்டைப் பற்றி கூறுகின்றன.

பீட்டாவைப் பொறுத்தவரை ஜல்லிக்கட்டுப் போன்ற கொடுரமான விளையாட்டுகளை வரலாற்றில் இருந்து இன்று இல்லாவிட்டால் கூட ஒரு நாள் நீக்குவோம்.

தமிழகஅரசின் அவசரச்சட்டத்தை இனி விரிவாக படிக்க இருக்கிறோம். உச்சநீதிமன்றத்திலும் நாங்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பு நிலுவையில் இருக்கிறது.

பீட்டா இந்தியா அமைப்பு நீதிமன்றத்தின் வழியாகவே, இந்தியாவின் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படியில்தான் அனைத்து செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. எங்களுடைய அனைத்து செயல்பாடுகளும் சட்டப்படி, தவறுகள் இன்றியே இருக்கிறது. விலங்குகளுக்கு ஏற்படும் கொடுமை மட்டுமின்றி, பெண்கள், குழந்தைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக பீட்டா இந்தியாவுக்கும், அதன் உறுப்பினர்கள், அதிகாரிகளுக்கும் பல மிரட்டல்கள், அவதூறு செய்திகள் போன்றவைகள் தொடர்ந்து வருகின்றன.

பீட்டா இந்தியா அமைப்பு ஒருபோதும் இந்தியாவின் நலனுக்கு விரோதமாக செயல்படாது. இந்தியாவின் சட்டப்படியே இயங்குகிறது. நாட்டின் சுற்றுச்சூழல், காடுகள், ஆறுகள், காட்டு விலங்குகள் ஆகிய முழுமையான உயிரினங்களின் நலனுக்காக பாடுபடுகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.