தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக நிரந்த பணி ஆணையை தடகள வீராங்கனை சாந்திக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த சாந்திக்கு நிரந்தர பணியானை வழங்கிய தமிழக அரசை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி செல்லும் வழியில் கத்தக்குறிச்சி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. செங்கள் சூளையில் பெற்றோருடன் பகுதிநேர வேலை, படிப்பு, என வறுமையின் பிடியில் வளர்ந்த சாந்திக்கு தடகளத்தில் மிகுந்த ஆர்வம். 

தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தனது நிலையை உயர்த்திக்கொண்டார் சாந்தி. 2003-ல் இருந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 15-க்கும் மேற்பட்ட பதக்கங்களைக் கைப்பற்றினார். 

குறிப்பாக 2006-ம் ஆண்டு கத்தாரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பிரிவில் சாந்தி வெள்ளிப்பதக்கம் வென்றார். 

ஆனால், சாந்தியின் பாலினத்தில் ஏற்பட்ட சர்ச்சையால் அவர் அடுத்தடுத்து நடக்க இருந்த அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டார். மேலும், சாந்தியின் உடலில் ஆண் தன்மை அதிகமாக இருப்பதாக கூறி ஆசிய விளையாட்டு அமைப்பு சாந்தியின் வெள்ளிப்பதக்கத்தை பறித்தது. 

இந்த பிரச்சினைக்கு பின் சாந்தியின் தடகள வாழ்க்கை ஏறக்குறைய முடிவுந்து வந்துவிட்டதாக அனைவரும் எண்ணினர். ஆனால், தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து பல மேல் முறையீடுகள் செய்தார். 

குடும்ப வறுமையின் காரணமாக மீண்டும் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றார். 

இந்நிலையில், தமிழக அரசிடம் அளித்த கோரிக்கையால், சாந்திக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ. 5 ஆயிரம் ஊதியத்தில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளர் பணி அளித்தது. 

இந்த ஊதியம் தனக்கு போதவில்லை, நிரந்தரப்பணி அளிக்க பலமுறை அரசுக்கு சாந்திக்கு கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில் சாந்தியின் கோரிக்கையை ஏற்று விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக நிரந்த பணியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இந்த உத்தரவுக்கான பணி ஆணையும் சாந்தியிடம் அதிகாரிகள் வழங்கினர்.சாந்தியின் கடந்த 10 ஆண்டுகால கோரிக்கைக்கும், உழைப்புக்கும் வெற்றி கிடைத்துள்ளது.